Posts

Showing posts from 2018

வலியதிகாரம்

கட்டிய கனவொன்றை கலைத்து கல்கல்லாய் உடைத்து உடைத்தக் கையின் உதிரத்தை வறண்ட உதட்டிலே நிரப்பி உன் எச்சில் படிந்த கன்னங்களைக் கண்ணீரால் அழுத்தி துடைத்துத் தோர்த்து இமையிரண்டின் நடுவில் நிற்குமுன் பிம்பத்தை மறைக்க என்னுலகை இருளாக்கி அகராதியெல்லாம் உன் மொழியானதால் ஊமையாகி வாயடைத்து விரல் கோதிய கேசத்தில் வாசம் பூட்டி.. முடியாமல் முத்தப் பதியமிட்ட தேகத்தில் பட்ட முளைகளை களையாமல் உன் நெற்றி வேர்வை சேர்த்த வெற்றுக் கோப்பையை நுகர்ந்தே தாகம் தீர்த்து நெஞ்சக்குழியில் நீ வைத்த பூந்தோட்டத்தில் மிச்சமிருக்கும் சருகை மெல்ல தின்று இறுக அணைத்திருக்கையில் என் மேல் தைத்த உன் தேகம் பிய்த்து எடுத்ததால் வழிந்த குருதியோடும்.. ஆறுபோகம் அறுவடை செய்து நித்தமும் தின்று செரித்த நினைவுகளின்  வாடையோடும்.. இறந்தே கிடக்கின்றேன் நான்!

கைரேகை ஓவியம்

வெள்ளைக்காகிதம் எனை கைரேகை ஓவியங்களால் நீ நித்தமும் நிரப்புகிறாய் விரல் தூரிகையால் உணர்வுகள் குழைத்து மோகப்படங்கள் வரைகிறாய் மென்தேகம் கடந்து திசுக்களிலும் அணுக்களிலும் ஒரே ஓவியங்கள் வரைபவனில்லை நீ ஒவ்வொன்றும் புதுநிறம் இரவின் கருப்பு, நிறங்களை விழுங்க முயன்று தினமும் தோற்றே நிற்கும்! ஓவியங்களில் லயித்து உணர்ச்சிகளால் உணர்வற்று இருக்கும் என்மேல் ஓடும் உவர் ஜீவநதியால் ஓவியங்கள் அழிவதில்லை அவைகளின் ஈரம் காய்வதுமில்லை..

நானெனும் நீ

நடுங்கும் ஓர் குளிரிரவில் நரம்புகள் கிழிக்கும் ஞாபக ஈட்டியால் நினைவு மெத்தைக்குள் பொதிந்தே நீர் கோலமிடுகிறேன் போர்வையில்.. சிந்தும் துளியெல்லாமுன் பிம்பம் சித்தன்னவாசல் ஓவியமாய் அது மாயை ஆனால் மறுக்கும் அறிவியல் மறந்த மனம் சுயமே மறந்த மனமாதலால் திரட்டியத் துளிகள் சேர்த்து ஞாபக மூட்டையை பிரித்து ஒவ்வொன்றாய்த் துவைத்து அலசி அடித்துக் கசக்கிப் பிழிந்த பின்னும் அதில் இன்னும் ஒரு சொட்டு ஞாபகம் ஒரு சொட்டின் தொடர் வினையால் மறு கணமே மூட்டை நிறையும் வினைப்பயனால் கூடும் கனம் மூட்டை சுமந்தே தேய்ந்த முதுகெலும்பை முட்டியே உள்நுழையும் ஞாபகக்கூறுகள் மச்சில் கலந்து பின்னதைக் குடைந்து நெஞ்சின் உள்ளே நுழைந்து வெடிக்கும் வெடித்தத் துகள்கள் உதிரத்தில் குழைந்த அடுத்த நொடி நானெல்லாம் நீயாகிப் போகும்!!!

மனப் பட்டாம்பூச்சிகள்

உன் கண்சிமிட்டலைக் கண்டுதான் என் மனப் பட்டாம்பூச்சிகள் பறக்கப் பழகுகின்றன தொண்டைக்குழியில் ஓராயிரம் வார்த்தைக் கருக்கள் உன் ஒலி குடித்தே நித்தமும் வளர்கின்றன விடாமல் பற்றி எரியுமென் மனதில் உன் புன்முறுவல்கள் எண்ணெய் ஊற்றுகின்றன வியர்வைத் துளியில் தலைத் துவட்டி மலர விரல் மொட்டுகள் காத்துகிடக்கின்றன உனக்கும் எனக்குமான இடைவெளியில் விடையற்ற வினாக்கள் ஜனித்து மரிகின்றன உயிரில் பாதியை காற்றில் கரைத்து உன்னுள் அனுப்புகிறேன் இணையாத நம் துருவங்களை இணைக்கும் முயற்சியில்... கரையணைக்கக் கடல் தூதுவிடும் அலையாய் நினைவலைகள் தூதுவிட்டே நித்தமும் வாழ்கிறேன் தனித்தீவாய்!

மௌனமொழி

என் பிரபஞ்சம் அனைத்தும் உன் சாயல் பூசியே திரிவதால் எங்கும் நிசப்தம்.. உன் அமைதியால் நான் நடமாடும் மயானக்காடாகி போனேன்! உன் மௌனக்கடலில் நீச்சல் பழகுகிறேன் என் வெறுமையை தீர்க்கும் வார்த்தை முத்தொன்றெடுக்க மூழ்கியும் தொலைகின்றேன்! மழலையின் முதல் குரல் கேட்கத் தவிக்கும் தாயாய் வராதா கடிதமொன்றுக்காக காத்துக்கிடக்கும் தபால் பெட்டியாய் ஏங்கி நான் கிடக்கிறேன்! நீ என்றோ பேசிய வார்த்தைகள் அனைத்தையும் சலவை செய்தே அதன் சாயம் வெளுத்தாகிவிட்டது.. நூலிழைகள் பிரிந்து பஞ்சாகி காற்றில் பறந்தோடி விட்டது! எஞ்சியிருக்கும், உன் மௌனங்களை மொழிப்பெயர்த்தே நான் வார்த்தைகளை மறக்கிறேன்! நான் முழுமையாய் பேச மறப்பதற்குள் ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு! இந்தப் பிறவி கடப்பதற்கு போதுமானதாய் ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு! ஆயிரம் ஆறுதல் கேட்டும் ஆறாத காயம் தீர்க்க ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு! பிழைத்துக் கொள்கிறேன்..

எட்டாம் திணை

திணைகள் ஏழும் கசந்து எட்டாம் திணை ஒன்றில் ஊஞ்சலாடுகிறேன்.. இரவுகளனைத்தும் பெரும்பொழுதிங்கே சிந்திக்காத நேரங்களோ சிறுபொழுது.. விதைத்த அன்பின் அறுவடைக்காக காத்திருத்தலும் உடைந்த இதயத்தை மீண்டும் ஒட்டவைத்தலுமே தொழில்கள் இங்கே.. தூக்கம் தொலைத்த கூகையும் தூரத்தில் குரைக்கும் ஓநாய்களும் நியூட்டனின் ஆப்பிள் ‌மரமும் சாகா பாவோபாப் மரமும் சுறுசுறு வாகை மலரும் சோம்பேறி காக்டஸ் மலரும் வால்கா நதிக்கரையும் மெசொப்பொத்தேமிய நாகரீகமும் கற்பனையில் கட்டி இன்னும் பெயரிடாத ஊர்களும் வேடிக்கை மாந்தர்களும் வேற்றுகிரக வாசிகளும் கருப்பொருட்கள் இங்கே.. சிந்தித்தலும் சிந்தித்தல் நிமித்தமும் இரண்டாம் உலகம் ஒன்றில் நிஜம் மறந்து தொலைதல் கூடும் கேலிப்பேச்சுகள் பறையோசையாகும் குறிஞ்சியாய் குரல்கள் சில யாழ்மீட்டும்.. கண்ணாம்பூச்சி இங்கு வீரவிளையாட்டு... இதோ.. கண்களை மூடி எனையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!  இருந்தும், இனிப்பாகத்தான் இருக்கிறது தனிமையும் தனிமை சார்ந்த இடமும்!

புதைக்கும் பூக்கள்

எழும்ப எழும்ப எனை அழுத்திப் புதைக்கும் பூக்கள்! ஆயிரமாயிரம் கட்டுப் பூக்களின் சுமை கணக்கத்தானே செய்யும்? உடல் சுற்றியிருக்கும் அத்தனைப் பூக்களை உதறிவிடவே ஆசை ஒரே குலுக்களில் குலுக்கக் குலுக்க மென்மேலும் கொட்டப்பட்டுக் குவியும் பூக்கள் பூக்களுக்கு வண்ணமிட்டு வாடாமல் நீர்விட்டு நேர்த்தியாய் அடுக்கி சவரம் செய்து தேவையெனில் சிகிச்சைகள் பார்த்துக்கொள்வதே வேலை கனவுகள் தொலைத்து வாய் தைத்து தேடல் மறந்து கோபம் ஒளித்து சாயம் பூசி மாறுவேடமணிந்து சிரிக்கும் பூக்களுக்கு மென்மை,பணிவு,அழகு,அடக்கம் என விதவிதமானப் பெயர்கள்! போலிப் பூக்கள் இவைகளை சூடியே வாடிவிட்டேன்... வேண்டுவதெல்லாம் அடர் வனமும் உடை வாளுமே!

மதில் மேல் பூனை

கிழிக்கும் கண்ணாடிச் சுவர் இழுக்கும் அலை ஒருபக்கம் கொதிக்கும் உலை ஒருபக்கம்  ஈர்க்கும் விசையோ இருபக்கம் உலையில் வெந்துச் சமைவேனோ அலையில் விழுந்துத் தொலைவேனோ விசையை ஏமாற்றும் வித்தை அறிவேனோ தசையைக் கிழிக்கும் காயம் மறவேனோ உலையின் வெப்பம் தணியலாம் அலையின் வேகம் குறையலாம் விசையின் திசை மாறலாம் கண்ணாடி பூக்கள் ஆகலாம் ஆதலால், நடைப் பழகிக் கொள்கிறேன் நடனமும் பயில்கிறேன் குத்திக் கிழிக்கும் கூர்முனை மேல்.. சிந்தும் இரத்தத்தால் சுவரெல்லாம் விரிசல்! விரிசல் சுவர் விறுக்கென உடையலாம் அதற்குள், அலையிலே நீந்தப் பழகியிருப்பேன் உலையிலேப் பக்குவமடைந்திருப்பேன்.. அது வரைக் கால்களில் இரத்த வெள்ளம் மட்டுமே உறுதி!

சல்லாப எலிகள்

சாளரம் கிழித்து கன்னம் வருடும் காற்று கூடவே காதிலோடும் கானம் இமைகள் இணைந்திட துடிக்க இதயம் திடுக்கிட்டு உரக்க உரைத்தது, "இதுப் பேருந்து.. ஒட்ட படாத ஓட்டைகளில் சல்லாப எலிகள் வாலாட்டலாம் அரிக்கும் அதன் விரல்கள் புதிதாய் ஓட்டையும் போடலாம் கண்காட்சி பொருளாவாய் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒருயிடமும் மிச்சமில்லாமல்.. அனுமதியின்றி அத்துமீறி அந்தரங்கம் தொட நினைக்கும்.. துப்பட்டா கவசமெல்லாம் செல்லாது போர்வையையும் துளையிடும் காமூக எலிகளிடம்! கண்ணாடி திரையிட்ட பார்வையோ அங்குலம் அங்குலமாக உடலை அளக்கும் அதன் விரல்‌ புழுக்களோ நீண்டு நெளிந்து ஆடையின் முடிவுகளிலே நுழைந்திட துடிக்கும்.. கண்விழித்து கூக்குரல் நீயிட்டால் கேட்க திராணியற்ற முதுகெலும்பு வாயில்லா சுயநல மாந்தர் பலர் சூழ் உலகிது செய்தியின் தலைப்பாய் நீயானால் சமூக வலைதளங்களில் பதியப்படுவாய் கிடைக்கும் லைக்கும் ஷேரும்! ஆகையால், விழித்தேயிரு கையிலோர் கட்டையோடு.. தொட்டவுடன் எரித்து சாம்பலாக்கும் கவசம் ஒன்றைப் படைக்கும் வரை !!!"

கடவுளின் கல்லறை

கார்மேகங்களிடம் கடன் வாங்கியக் கருப்பை உடுத்திப் பறவைகளின் எச்ச அணிகலன்கள் அணிந்து தன் தோல் உரித்துக் குருதியும் சதையும் கலந்தொழுகக் கூடவே மிச்ச எலும்புகளும் விழுந்துடைய உடைந்த எலும்புத் துகள்களைத் தாங்கும் கை கால் விரலோடு நரம்பும் பின்னிப் பிணைந்து அழும் அழுகும் நிலையில் யாரும் கேட்பாரற்று மண்ணுக்குள் புதைத்தச் சடலமாய் சிதிலமடைந்த அந்தத் தேவாலயம்... அதிலே மிச்ச உயிரைக் குடித்துக் கும்மாளமிடும் கூகைகளும் சிலந்திகளும்.. அங்கே மெழுகுவர்த்திகள் எரிக்கப்படவில்லை.. பாவம் இருட்டறையில் இயேசுக் கண்கட்டி! அங்கே மணியோசை கேட்பதில்லை.. தனிமை கீதமொன்றை இசையின்றி திரும்ப திரும்ப முனுமுனுத்துக் கொண்டே இயேசு! அவரின் உடைந்த சிலுவையை ஒட்டவைக்க ஆள்யாருமில்லாமல்..! அங்கே திருமணங்கள் நடத்தப்படவில்லை.. புன்னகைகளும் பூக்களும் புளித்துக் காய்ந்துவிட்ட இடமது! பாடல்களும் பஜனைகளும் பாவ மன்னிப்புகளும் ஜெபங்களும் ஜனித்து மரிந்த இடமது.. பிராத்தனைகளும் புலம்பல்களும் கூக்கரலிட்டு கூவி ஓய்ந்த இடமது.. பாலும் அப்பமும் தின்றுக் கொழுத்து செரித்த இடமது.. இன்றும் நினைவுகளை அசைபோ...

தீராக் காதல்

நிலா வானம் காற்று காவியக் காதல் வேண்டா.. மழையாய்‌ எனையணைத்து மடியிலே துயில‌ ஏங்கும் முகிலாய்.. அதிகம் ஆர்ப்பரிக்காத ஆச்சரியங்கள் நிறைந்த ஆழ்கடலாய்.. மகிகையாய் மனதை மயக்கி கவிழ்க்கும் மலை முகடாய்.. அன்பினருவியில் மூழ்கி ஆனந்தப் புதையல் எடுக்கும் அடர் வனமாய்... கோபம் உருக்கி நகையாக்கும் கர்வம் சமைத்து பணிவாக்கும் தணலாய்... காதல் வேண்டுமெனக்கு! தேனே கரும்பே கனியே எனப் பொய்யாய் இனிக்கும் காதல் வேண்டா... மனதின் பிணி தீர்க்கும் மருந்தின் கசப்பாய்.. வெற்று நாட்களையும் சுவையேற்றும் பொய்கோபக் காரமாய்.. மென்மை திரிந்து இதழைக் கடைந்து வெண்ணையெடுக்கும் நொதித்தலின் புளிப்பாய்.. நிலைகொள்ளா எனை கட்டுக்குள் வைக்கும் அலைகடல் உப்பாய்.... காதல் வேண்டுமெனக்கு! மலரே மணமே உயிரே உலகமே என வேண்டா.. விருட்சமாகும் விதையாய் நம்பிக்கை உரமாய் கைக்கொடுக்கும் விழுதாய்.. தட்டும் தென்றலாய் வருடும் வாடையாய் வியர்வை வாசமாய்.. திசுக்களின் இசையாய் ஹார்மோனின் தாளமாய் இதயங்களின் பாடலாய்.. உனக்கும் எனக்குமாய் தினமோர் உலகம் படைக்கும் தீராக்காதல் வேண்டுமெனக்கு! ...

வாயை மூடிப் பேசவும்

மிகைப்படக்கூறு.. கவனிக்கப்படுவாய்! குறைத்துக்கூறு.. பரிகசிக்கப்படுவாய்! உள்ளப்படிகூறு.. உண்மையில்லை யெனப்படுவாய்! பேசாதே.. கோழை என்பார்! அதிகம் பேசு.. பேதை என்பார்! சிரித்து பேசினால் பித்தன் சிரிக்கவில்லை என்றால் சிடு மூஞ்சி.. ஆமாம் என்றால் புத்தியற்றவன் இல்லை என்றால் விதண்டாவாதி! போற்றினால் பொய்மை தூற்றினால் கயமை மாற்றினால் தந்திரம் மாற்றவில்லை எனில் பிடிவாதம்! அறிவுரை தந்தால் அதிகப்பிரசங்கி இல்லையேல் அறிவிலி ஆறுதல் கூறினால் போலியானவன் இல்லையேல் அக்கறையற்றவன் இன் சொல் வஞ்சகன் வன் சொல் நஞ்சகன் சலனமற்றவன் ஜடம் சாந்தமானவன் சாமியார் ஆர்ப்பரித்தால் ஆவேசம் பொறுமையென்றால் வேசம் இவற்றுக்கெல்லாம் நடுநிலையறிந்து நடந்தால் கிடைக்கும் நடிகன் எனும் பட்டம்!!

A thousand years

Christina Perri's A thousand years : முதல் தமிழாக்க முயற்சி.. கிராமிய version Heart beats fast Colors and promises How to be brave? How can I love when I'm afraid to fall But watching you stand alone? All of my doubt suddenly goes away somehow One step closer I have died everyday, waiting for you Darling, don't be afraid, I have loved you for a thousand years I'll love you for a thousand more Time stands still Beauty in all she is I will be brave I will not let anything, take away What's standing in front of me Every breath, every hour has come to this One step closer படபடனு மனசு துடிக்க சந்தோச வண்ணம் அடிக்க பல சத்தியம் தான் புதைஞ்சிருக்க பாவி மவ துணியலயே காதலிக்க ஆனா ராசா ஒத்தையில நீ நிக்க பார்க்கையிலே நான் தவிக்க சந்தேகமெல்லாம் ஓடிப் போக இன்னோர் எட்டு வச்சு கிட்டதான் நீ வந்தா என்ன? உனக்காக காத்திருந்தே தெனம் உசிர விட்டேனே ராசா, கவலையும் தான் கொள்ளாத ஆயிரம் காலம் உன காதலச்சே இன்னும் ஆயிரம் வேணுமுனு காத்து கெடக்கன் காலமும் கரையிலே கன்னி அழகுக் கொறையிலே த...

Perfect

*மொழிபெயர்ப்பு- Part 1* Song : Perfect by Ed Sheeran Well I found a woman, stronger than anyone I know She shares my dreams, I hope that someday I'll share her home I found a love, to carry more than just my secrets To carry love, to carry children of our own We are still kids, but we're so in love Fighting against all odds I know we'll be alright this time Darling, just hold my hand Be my girl, I'll be your man I see my future in your eyes தேடி பிடித்துவிட்டேன்.. இவ்வுலகில் தனித்த ஒருத்தியை, என் இரும்புப் பெண்ணை, என் கனவுகளின் பங்காளியை.. தேடி பிடித்துவிட்டேன்.. என் இரகசியங்களின் சாவியை, என் காதலை சுமந்திடும் காதலை, என் குழந்தையை வளர்த்திடும் ஓர் குழந்தையை! நாம் இன்னும் வளரா குழந்தைகள் அதனால் காதல், நம்மை நனைக்காமல் விடவில்லை மூழ்கடித்துவிட்டது.. சண்டையும் சச்சரவும் சிறிது நேரமே.. என் கை பிடித்துக் கொள்ளடி.. எனக்கான நீ.. உனக்கான நான்.. நமக்கான நாமாக.. நாம் இருப்போம்! உன் இரு விழியில், என் உலகம்‌‌!

அவனும் நானும்

Image
அவனும் நானும்.. மொழியும் தெழியும்.. அவனும் நானும்.. படகும் கழையும்.. அவனும் நானும்.. மழையும் மண்ணும்.. அவனும் நானும்.. துயிலும் கனவும்... பூவும் பிரசமும்.. பாங்கும் பாசமும்.. பொழிலும் எழிலும்.. அவனும் நானும்.. எண்ணும் கணமும்.. ஏடும் எழுத்தும்.. அவனும் நானும்.. சொல்லும் பொருளும்.. நொடியும் பொழுதும்.. குளிரும் நெருப்பும்.. முகிலும் கதழ்வும்.. முகையும் புறவிதழும்.. விண்மீனும் வெளியும்.. விசையும் இயக்கமும்.. முன்மியும் மின்னணுவும்.. நானும் அவனும்.. நானும் அவனும்.. அசையும் சீரும்.. வயலும் வரப்பும்..உலமும் கோலமும்.. நானும் அவனும்.. வினையும் கலவையும்.. தறியும் பட்டும்.. தண்டும் உலவையும்.. அவனும் நானும்.. நீவியும் சாயமும்.. அவனும் நானும்.. சுவரும் வர்ணமும்.. அவனும் நானும்.. கல்லும் உளியும்.. அவனும் நானும்..கண்ணும் ஒளியும்.. அவனும் நானும்.. ஏமமும் யாமமும்.. அவனும் நானும்.. ஆரமும் வட்டமும்.. அவனும் நானும்.. தசையும் திசுவும்.. அவனும் நானும்.. திசையும் வழியும்.. அவனும் நானும்.. மொழியும் தெழியும்.. அவனும் நானும்.. படகும் கழையும்.. அவனும் நானும்.. மழையும் மண்ணும்.. அவனும் நானும்.. து...

நம் காதல் டம்போவிட்டா

Image
முன் குறிப்பு  🙃  : சிகிசோரா,டிமிசோரா - ருமேனிய நகரங்கள் விலேட் - vlad the impler, டிராக்குல கதா பாத்திரம் உருவாக காரணமான இளவரசன் மார்ட்டிசோர் - ருமேனியாவின் வசந்தகால திருவிழா. சிவப்பு வெள்ளை கயிரில் சிறு பொருட்கள் சேர்த்து பரிசுகளை பரிமாறிக்கொள்வர். புக்காரெஸ்ட் - ருமேனியாவின் தலைநகர். Bucharest was named after a shepherd called Bucur who was in love with a young lady named Dambovita,like the river that flows through the city. டம்போவிட்டா - நதி ஔல்டேனியா - பாலைவனம் *********************************************************************** சிகிரோவில் டிராக்குலா தேடி அலைபவனே.. டிமிசோராக் குடை வீதியில் பாடி அலைபவள் நான்! விலேடின் பரம்பரையோ வித்தியாசக் காரனே உயிரைக் கடைகிறாய் உள்ளக்குறுதி கேட்கிறாய் மலை மேடு உன் வீடு மழைக் காடு என் கூடு வீட்டின் சாவியைத் தொலை காட்டில் ஆடித் தொலையலாம் வாட்டும் குளிர் விரட்டும் வெயிலோனே இது வசந்த காலம் இனி வண்ணமே பூக்கும் நம் வாழ்வினில் உன்கோவச் சிவப்பில் அன்பின் வெண்மை கோர்த்த மார்ட்டிசோர் சேர்த்துவிடு என்னிடம் காதல் தோய்த்...

அன்பின் குறியீடு

Image
அன்பின் அடைப்புக்குறியாய்( {} ) அழகான ஆச்சரியக்குறியாய் (!) நம் காதல் வேர்விட்டு.. முற்றுப்புள்ளிக்கும்(.) அரைப்புள்ளிக்குமிடையே( ;) முளைத்தெழும் கேள்விக்குறியாய்(?) நாம் விடையற்று இருப்போமா முப்புள்ளியிட்டு தொடர்ந்திடுவோமா... பதிப்புரிமையிட்டு(©) பதிவேட்டினில் பதிந்திடுவோமா இணைப்புக்கோட்டில்(-) இணைந்திடுவோமா-இல்லைச் சாய்கோடாய்ச்(/) சாய்ந்திடுவோமா வேண்டாம் உம்மைக்குறியிட்டு (&) நம்மைக் கோத்துக் கொள்வோம் உடுக்குறியோடு (*).. பிரிவின்மைக்கு மேற்கோளாய்த்(" ") திகழ்ந்திடவே..

கிணற்றுத் தவளை

கிணற்றுத் தவளையா? கயிறெதற்குத் தாவிக் கொள் தவலையில் ஏறிக்கொள் இல்லையேல், உயர குதிக்கக் கற்றுக்கொள்.. ஏனெனில்,உலகம் பெரியது.. காலம் சிறியது! கூண்டுக் கிளியா? சிறகிறுக்கே, அலகிறுக்கே, அவை பூட்டையும் உடைக்கும்! சிறுகு விரித்துப் பறந்திடு.. சிறகொடிந்தக் குயிலா? கால்கள் போதுமே புதிய சிறகு ஓர் நாள் முளைக்கும்! ஏனெனில்,உலகம் பெரியது.. காலம் சிறியது! கண்ணாடிப் பெட்டிக்குள் சிக்கித்தவிக்கும் சிறு மீனா? முட்டிவிடு! உடையாதக் கண்ணாடி இங்கேது? நீமோ பார்த்தில்லையா? ஏனெனில், உலகம் பெரியது.. காலம் சிறியது! மதில் மேல் பூனையா? தயக்கம் தவிர்த்து குதித்துவிடு! வேண்டாம் என்றால் மீண்டும் சுவர் ஏறிவிடலாம்! ஏனெனில், உலகம் பெரியது.. காலம் சிறியது! அலை வந்தால், வலை புகுந்ததுப் போதும்! சற்று நீச்சல் அடி நண்டே... கரைத்ததுப் போதும் கவிதைப் படை காகமே.. இடம் பெயர்தல் செய் பல வேர் பரப்பு மரமே.. மழை வந்தால் தொலைந்திடாதே நீள் நடனம் ஆடுத் தும்பியே.. ஓர் நாளில் மரிந்திடாதே மாயங்கள் புரித் தட்டானே.. ஏனெனில் உலகம் பெரியது.. காலம் சிறியது!

கறை

*கறைப் படிந்துக் கொண்டே இருக்கும்* உதிரம் கண்டு வாழ்வின் கடைசி நாள் இதுவோ எனக் கதறி அழுத அந்நாளை நினைக்கையில்.. கட்டிலறை வீட்டின் வெளியேயாகி அம்மாவை கட்டியணைத்துத் தூங்கமுடியா நாட்களில்.. நடுங்கும் குளிரிரவு உலக்கை தென்னை ஓலை குடுகுடப்பு சத்தமாய் கடந்த இரவுகளை எண்ணுகையில்.. இரத்ததின் நிறம் நீலமாய், வலி விளம்பரமாகையில்.. அத்தியாவசிய அணையாடையை சைகையில் கேட்டு பழகுகையில்.. புத்தகம் வைத்து பாவாடை மறைக்கையில்.. பிடித்த வெள்ளை ஆடை ஒதுக்குகையில்.. மாதத்தில் ஒருநாள் விடுப்பு எடுக்க உண்மை காரணம் மறைத்து நொண்டிக் காரணம் தேடுகையில்.. கோபமும் எரிச்சலும் மறைத்து கோமாளியாய் சிரிக்க பழகுகையில்.. நண்பன் நலம் விசாரிக்க கூச்சத்தோடு ஊமையாகையில்.. ஆசையாய் வளர்த்த துளசிக்கு அருகில் ‌போக தடைப்போடப் படுகையில்.. தேளும் பூராணும் ஈர்க்கும் இரையாகிப் போகையில்.. சாமிக்கூட சற்றுத் தள்ளி வைக்கையில்... புனிதம் தீட்டாகையில்.. கறைப்படிந்துக் கொண்டே இருக்கும்‌ உதிரத்தில் தோய்த்த உணர்ச்சிக்கறை..

என்செல்லநாய்குட்டி

ஒளி வீசுமவன் சிறு கண்களின் முன் வெளியின் இருளெல்லாம் தோற்றேவிட்டது அளவற்ற அவன் காதலின் முன் அமைதியாய் மண்டி இட்டுக் காதல் தோல்விகள் வாய் பேசும் மொழியனைத்தும் வாயடைத்து கைக்கோர்த்து கட்டிக் கொள்ளுமவன் மௌனத்திற்கு ஈடாகுமா? சர்க்கரை கரைத்த வார்த்தைகள் கொஞ்சல் குழைத்த அவன் வாஞ்சைகளுடன் போட்டிதான் இடுமா? நிராகரித்தல் துரோகம் கோபம் அகங்காரம் அவனதிகாரத்தில் இல்லை! மாந்தர்களின் நன்றியற்ற உலகிற்கு மாதவம் அவன் மாதவன்.. பின்னங்கால் பிடறியிலடிக்க காது மடல் துடிக்க அன்பின் கடலவன் எனை அணைக்க அலையாய் வரும்பொழுது அன்னையும் சற்றுத் தோற்றே நிற்பாள் வாலாட்டி எனை அவன் நுகரும் நொடி என் பெண் கர்வம் உடைந்து மழலைப் பெண்ணொருத்தி கைக்கட்டி நிற்பாள் நூறாய் உடைந்த என் இதயத்தை ஒட்டவைக்கும் யுக்தி அது! என்மொழி புரிந்தால், அவனிடம் நான் கேட்க எத்தனிப்பதெல்லாம் ஒன்று மட்டுமே, "பிரபஞ்சக் காதலை சுமக்கும் உன்னிதய வலி எவ்வளவோ?"

Translation of the song "Take me back to the night we met" from 13 reasons why

Translation of the song "Take me back to the night we met" from 13 reasons why.. உன்னிடம் கடன்பட்ட வழிப்போக்கனுள் ஒருவன் நான் உனை சேரும் பாதை தேடி அலையும் வழிப்போக்கன் நான் நாம் சந்தித்த இரவிற்கு எனை இழுத்து செல்லடி.. அங்கே எனை திருத்திக்கொள்கிறேன் வேறென்ன செய்ய? வேண்டுமென்றால், அங்கேயே உனை விட்டு விடுகிறேன்! உன்னை துளியாய், பின் பாதியாய், பின் முழுமையாய் தொலைத்தவன் நானடி நாம் சந்திக்க இரவிற்கு எனை இழுத்து செல்லடி.. செய்வதறியா முழிக்கும் பேதை நான் ஆவியாய்‌ எனை துரத்தும் கோதை நீ நாம் சந்தித்த இரவிற்கு எனை இழுத்து செல்லடி.. கோரமான இரவுதனில் கண்ணீர் கண்களோடு எனை விளகி நீ இருந்த அந்த இரவிற்கு எனை இழுத்து செல்லடி.. உன்னை துளியாய், பின் பாதியாய், பின் முழுமையாய் தொலைத்தவன் நானடி நாம் சந்திக்க இரவிற்கு எனை இழுத்து செல்லடி.. செய்வதறியா முழிக்கும் பேதை நான் ஆவியாய்‌ எனை துரத்தும் கோதை நீ நாம் சந்தித்த இரவிற்கு எனை இழுத்து செல்லடி.. I am not the only traveler Who has not repaid his debt I've been searching for a trail to follow again Take me back to the night we met ...

*A letter to my Raj*

*A letter to my Raj* ஆண்டுகள் பத்தாயிற்று உனக்கான கடைசிக் கடிதம் நானெழுதி. உன் வியர்வை வாசத்தையும் உன் விரல் எழுத்தோவித்தையும் தொலைப்பேசியால் தொலைத்தேவிட்டேன். அதனால் கிராகாம் பெல் மீதெனக்கு கோபமே! உன் கடிதத்தை பிரித்தவுடன் என்றும் என் கண் பின்குறிப்பை நோக்கியே ஓடும். "அன்பு கண்மணிக்கு ஆயிரம் முத்தங்கள்" என்றே அது என்றும் சொல்லும். இத்துனை வருடங்களில் எத்தனை ஆயிராமாயிம் முத்தங்களை நானியழந்து விட்டேன். அத்துனையும் மீட்டெடுக்கவே உனக்கிந்த ஒற்றை கடிதம். நான் அம்மாவின் செல்லப் பெண் என்றே ஊர் சொல்லும். அவர்களுக்கு தெரியாது ஏன் உனக்கும் கூடத் தெரியாது எனக்கு அம்மாவின் சேலை அணிவதை விட உன் சட்டையணிவதே கொள்ளை விருப்பமென. உன் அலமாரியில் காணாமல் போன சட்டை இதோ என் பெட்டியில் பத்திரமாய். என்றும் என் கைபிடித்து எனை நீ அழைத்து சென்றதில்லை. முதலில் வருத்தம் பின்னர் புரிந்துக் கொண்டேன் என் முன் சென்று எனக்கானப் பாதையை நீ செப்பனிடுகிறாய் என்று. பள்ளி விழாக்களிலோ பட்டமளிப்பு விழாவிலோ என் பக்கம் நீ நின்றதில்லை. கோபம் தான் உன் மீதெனக்கு. பின் அறிந்தேன்.. எனை செதுக்க உழைத்து களைப்பவன் ...

காதல் வேண்டா...

நிலா வானம் காற்று காவியக்   காதல் வேண்டா.. மழையாய்‌ எனையணைத்து   மடியிலே துயில‌ ஏங்கும்   முகிலாய்.. அதிகம் ஆர்ப்பரிக்காத   ஆச்சரியங்கள் நிறைந்த   ஆழ்கடலாய்.. மகிகையாய் மனதை மயக்கி கவிழ்க்கும் மலை முகடாய்.. அன்பினருவியில் மூழ்கி ஆனந்தப் புதையல் எடுக்கும் அடர் வனமாய்... கோபம் உருக்கி நகையாக்கும் கர்வம் சமைத்து பணிவாக்கும் தணலாய்... காதல் வேண்டுமெனக்கு! தேனே கரும்பே கனியே எனப் பொய்யாய் இனிக்கும் காதல் வேண்டா... மனதின் பிணி தீர்க்கும்   மருந்தின் கசப்பாய்.. வெற்று நாட்களையும்   சுவையேற்றும் பொய்கோபக் காரமாய்.. மென்மை திரிந்து   இதழைக் கடைந்து வெண்ணையெடுக்கும் நொதித்தலின் புளிப்பாய்.. நிலைகொள்ளா எனை   கட்டுக்குள் வைக்கும் அலைகடல் உப்பாய்.... காதல் வேண்டுமெனக்கு! மலரே மணமே   உயிரே உலகமே   என வேண்டா.. விருட்சமாகும் விதையாய்   நம்பிக்கை உரமாய்   கைக்கொடுக்கும் விழுதாய்.. தட்டும் தென்றலாய் வருடும் வாடையாய் வியர்வை வாசமாய்.. திசுக்களின் இசையாய் ஹார்மோனின் தாளமாய் இதயங்களின் பாடலாய்.. ...

மாயம்

கிழக்கு வெளுக்கையிலே கீழ் வானம் செவக்கையிலே காட்டாறு போல உன் நினைப்பு கரை அரிச்சு தான் போகுது.. ஆலமர பிள்ளையாருக்கு ஆயிரம் கொடம் ஊத்தி அரைபாதியா கரைச்ச பின்னும் ஆசைமட்டும் ஏனோ இன்னும் கரையல.. காக்கா கூட்டுக்குள்ள குருவி முட்ட கணக்கா கொத்திடும் குஞ்சிக்கிடையே கெடந்து நான் தவிக்கேன் மாம மகனே மாயக் காரா மதுர வீர மீசக்காரா மக்காச்சோள பல்லழகா மனச நான் பூட்டிவைக்க மச்சக் காளையா நீ சீற மந்தெரமெதும் போடாமலே மாயமாய் அது தொறந்ததேனடா?  

யாரா.. என் யாரா.

கணினி கண்மணியே கண்மை தீட்டியவளே கைப்பேசும் ஓவியமே காதல் தேவதையே யாரா.. என் யாரா.. பார்வை போர் வேண்டாமடி பனியாய் நானிங்கே கரைந்தேனடி கடக்கையில் தீண்டும் கட்டிடா கேசத் தீண்டலே போதுமடி   யாரா.. என் யாரா.. விடுமுறை வேண்டா ஊழியன் நான் வெள்ளி வெறுக்கும் வீணன் நான் உரசும் காதணியின் ரசிகன் நான்   இரகசியம் பேசும் உதடுகளின்   மொழிபெயர்ப்பாளன் நான் உரசவா இரகசியம் கூறவா?   யாரா..என் யாரா.. வெற்றுரு நானடி வலைப்பதிவு நீயடி வலைப்பதியவா   வழு மறைக்கவா வெற்றுப் பக்கம் நிரப்ப விசை தட்டவா விரல் பிடித்து இசை மீட்டவா யாரா.. என் யாரா.. பதில் கூறடி பதிவிறக்கி கொள்கிறேன் மனதெல்லாம் உன் தரவுத்தளமடி   மீள்வி கொள்கிறேன் செயலி நீயடி எனை கொஞ்சம் சேமித்து வையடி யாரா.. என் யாரா.. வானம் தாண்டலாம் வா யாரா.. சாளரம் மூடி வை.. பூக்கோடி பறிக்கலாம் வா யாரா.. சொடுக்கி தூக்கி எறி.. உலகம் சுற்றலாம் வா யாரா.. உலாவி நிறுவுதல் நிறுத்து.. கடல் காதல் போதுமே   கணினி மூடடடி என் கண்களை பாரடி யாரா.. என் யாரா.... -ஹேமா 07/17 பி.கு: வெற்றுரு- blank character வழு - bug/defe...

அவள்-கடல் ❤️

அவள்   ஆச்சரியங்களின் உலகம் தேடல்களின் துவக்கம் அவள் தட்டிக் கொடுப்பாள் தன்வசம் இழுப்பாள்   கோபமாய் கொப்பளிப்பாள் அமைதியாய் ஆர்ப்பரிப்பாள் நெருங்குமுன் சத்தம் பாதிக் கடந்தால் நிசப்தம் மனித மூளைக்கு   விளங்கிடாதப் புதிர் அவள்   நீல வர்ணம் பூசிய அலங்காரி கருப்பும் பூசிக் கொள்ளும் மாயக்காரி சிலசமயம் கொள்ளைக்காரி பல உயிர்களின் சரணாலயம்   பாடம் புகட்டும் பல்கலைக்கழகம் அவள்   பார்க்க சலிக்காதவள் பரந்து விரிந்தவள் சூரியனையும் விழுங்குபுவள்   நிலவின் குளிர்மையும் உடையவள் எச்சரிக்கை, அவள் மேல் காதல் மட்டும் கொள்ளாதே உன்னை மூழ்கடித்து விடுவாள்   மூர்ச்சையாக்கிவிடுவாள்   வேண்டுமென்றால்   கட்டி அணைத்துக்கொள்   ஓர் தாயை உணர்வாய்   அவளிடம்!

காலம் சிறியது!

கிணற்றுத் தவளையா? கயிறெதற்குத் தாவிக் கொள் தவலையில் ஏறிக்கொள் இல்லையேல், உயர குதிக்கக் கற்றுக்கொள்.. ஏனெனில்,உலகம் பெரியது.. காலம் சிறியது! கூண்டுக் கிளியா? சிறகிறுக்கே, அலகிறுக்கே, அவை பூட்டையும் உடைக்கும்! சிறுகு விரித்துப் பறந்திடு.. சிறகொடிந்தக் குயிலா? கால்கள் போதுமே புதிய சிறகு ஓர் நாள் முளைக்கும்! ஏனெனில்,உலகம் பெரியது.. காலம் சிறியது! கண்ணாடிப் பெட்டிக்குள் சிக்கித்தவிக்கும் சிறு மீனா? முட்டிவிடு! உடையாதக் கண்ணாடி இங்கேது? நீமோ பார்த்தில்லையா? ஏனெனில், உலகம் பெரியது.. காலம் சிறியது! மதில் மேல் பூனையா? தயக்கம் தவிர்த்து குதித்துவிடு! வேண்டாம் என்றால் மீண்டும் சுவர் ஏறிவிடலாம்! ஏனெனில், உலகம் பெரியது.. காலம் சிறியது! அலை வந்தால், வலை புகுந்ததுப் போதும்! சற்று நீச்சல் அடி நண்டே... கரைத்ததுப் போதும் கவிதைப் படை காகமே.. இடம் பெயர்தல் செய் பல வேர் பரப்பு மரமே.. மழை வந்தால் தொலைந்திடாதே நீள் நடனம் ஆடுத் தும்பியே.. ஓர் நாளில் மரிந்திடாதே மாயங்கள் புரித் தட்டானே.. ஏனெனில் உலகம் பெரியது.. காலம் சிறியது!

மருதாணி

மருதாணி பூவாசம் மூக்கத் துளக்கையிலே மனச ஈர்க்கையிலே மழைதேடும் ஈசலா தழைத்தேடி ஓடிப்போனன்.. எறும்புக் கூட்டம் சாரப் போட கடைசி கட்டெறும்பா நான் நாலு வீடு கடக்கையிலே ஆளொயர செடி ஒன்னு பூத்துக் காத்து கெடக்கு! மரமோ செடியோ அது ஆராய்ச்சி எனக்கெதுக்கு? முந்தானை மடிச்சுதான் மடமடனு பறிக்கையிலே மதுர வீரன் கணக்கா கடகடனு அவன் நடந்துவர படபடனு துடிதுடிச்சு சரசரனு நான் வீடு சேர.. பாக்கு புளி வச்சு, ஒட்ட ஒட்ட அழவான அரைக்கையிலே வட்ட வட்டமா அவன் நெனைப்பு கையெல்லாம் அதப் பூசி காத்துக் கெடக்கையிலே அவன் கண்ண நெனைக்கையிலே என் மொகமெல்லாம் மருதாணி..

பிழம்பொன்று

காற்றுக்கெல்லாம் அசைந்துக் கொடுக்கும் அக்கினிப் பிழம்பு அணையாதிருத்தலும் ஆக்ரோசமாதலும்.. இரத்தம் தோய்த்த மஞ்சள் நிறத்திலே, காளியும் துர்க்கையும் தீட்டும் புனிதமும் அழிப்பதும் அளிப்பதும் சதையும் சத்தியமும் தணலின் தவமும் சுள்ளியின் சாபமும் கரைத்த மலையின் கக்கல்களும், குடித்த நீரின் எச்சங்களும், எரித்தக் கூரையின் எலும்புகளும், நிர்வாணமாக்கப் பட்டக் காடுகளும்... பிடித்தத் திரியின் நிதானமும், அணைத்த அகலின் அமைதியும், சமைத்த விறகின் சாம்பலும், உருக்கி உருக்கொடுத்த உலோகமும்... பிழம்பொன்று.. ஒளி ஆக்கிடு, உருவாக்கிடு, இல்லை பலி ஆக்கிடு .. இடமதை நீயே தேர்ந்தெடு! -ஹேமா

புத்தனின் புதல்வி

ஆமாம் எனக்கு காது கேட்காது தேவையில்லை என்று கழட்டி விட்டேன் இதோ,அதிர்வலை! இவை போதும் எனக்கு நான் புத்தனின் புதல்வி அமைதி விரும்பி பிடித்த தொழில் விவசாயம் பொழுதுபோக்கு உடற்பயிற்சி ஆமாம் பெண் என குறைத்து எடையிடாதே! எச்சரிக்கை என்னை விட ஐம்பது மடங்கு எடையுள்ளவனையும் தூக்குவேன் என் நாட்டிற்கு நானே ராணி அமைச்சர்களும் உண்டு அனைவருக்கும் மரியாதையும் உண்டு புத்தனின் புதல்வி ஆயிற்றே ஹிட்லர் பிடிக்குமா? டையனாவின் அழகுடையவள் டைனோசரையும் பார்த்தவள் கூடி வாழ்பவள் சேமிக்க தெரிந்தவள்! இரண்டு வயிறாயிற்றே சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூட பெண்ணியவாதி ஆணை எதிர்ப்பார்ப்பதில்லை எதற்கும்! இனம் பெருக்கக் கூட! இப்படி ஒரு பெண்ணா என்று ஆச்சரியமா? இன்னோர் இரகசியம் கூறவா? நல்ல வேளை எனக்கு தற்காப்புக் கலைத் தெரியும் மனிதன் என்னை கற்பழித்திடமுடியாது! இப்படிக்கு ராணி, எறும்புக் காலணி!

இரவு மழை

தனிமையை தோழியாக்கும் தூக்கத்தை எதிரியாக்கும் இந்த இரவை கடந்திட யுக்தி ஒன்று வேண்டும்.. நினைவலைகளை அடித்து ஞாபக மூட்டையை அவிழ்க்கும் இந்த இரவை அமைதியாக்கும் இசை ஒன்று வேண்டும்... எண்ணங்களை சிதறடிக்கும் மூளையை கலங்கடிக்கும் இந்த இரவின் வாயடைக்க வார்த்தை ஒன்று வேண்டும்.. நாட்காட்டியை புரட்டி போட்டு கடந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இழுத்து செல்லும் இந்த இரவை நிகழ் காலத்தில் கட்டிடும் கயிரொன்று வேண்டும்.. எரியும் இந்த நெருப்பை அணைக்கும் மழை ஒன்று வேண்டும்.. அதில் முழுமையாய் நான் நனைந்திட வேண்டும்.. முடிவில்லா இரவுதனை கரைத்திடும் கரைப்பான் ஒன்று வேண்டும்.. அதில் இந்த கருப்பினை முழுமையாய் கரைத்திட வேண்டும்.. இந்த நீண்டதோர் இரவை தாங்கும் கோப்பை ஒன்று வேண்டும்.. ஒரு துளி மிச்சமின்றி அதை குடித்திட வேண்டும்..

வேடிக்கை பார்ப்பவள்-2

"ஒன்னு ஐஞ்சு..மூனு பத்து" ஒரு மூலையில் அரங்கேறும் வியாபார வியூகம் விற்றுத் தீர்ந்தது.. கானா பாடல் போல ஒலிக்கும் ஊர்களின் பெயர்கள் பாடகன் நடத்துனராய் கனவுகள் சில்லரையாய்.. ஆவிப் பறக்கும் கல் வட்டமாய் நீளமாய் வெண்மையாய் வண்ணமாய் வரைந்துக் கொண்டிருக்கும் அவன்.. கண்ணாடி காலில் தைக்கவில்லை அவன் செருப்பை தைத்துவிட்டான்.. கொசுக்கள் பறந்தன வாசம் போடுபவன் வந்துவிட்டான் மயிலிறகு குட்டிபோடா விட்டாலும் அவனை பட்டினிப் போடவில்லை.. மலர்கள் மென்மையானவையா? மூட்டை சுமக்கும் அவன் முகத்தில் வழியும் வேர்வை சொன்னது, "மலர்களும் கணக்கும்".. நான் நாலாவாறு தொலைந்திருந்தேன் நலம் விசாரித்தல் நடந்து கொண்டிருந்தது முதல் இருக்கைக்கும் கடைசி இருக்கைக்கும் பேருந்து இன்னும் நகரவில்லை..

வேடிக்கை பார்ப்பவள்

அவள் கையில் ஒரு கூடை பூக்கள் தலையில் ஒற்றை பூவில்லை அந்த பூக்கள் அனைத்தும் விற்பனைக்கே! அதோ,அங்கே தலைவலியுடன் தேநீர் போடும் அவர் மற்றவர்களின் தலை வலி தீர்க்க.. பசி நிறைந்த கண்கள், வண்டி நிறைய பழங்கள் விற்கவில்லை.. கிழித்து கிழித்து ஒட்டும் ஒருத்தன் சுவரொட்டியை.. உதட்டில் புன்னகை.. மேசை துடைத்த சிறுவன் கையில் சில்லறை.. சுத்தம் சோறு போடும் குப்பை பொறுக்கும் ஒருத்தி.. இவர்களை வேடிக்கை பார்ப்பவளாய் நான் பேருந்து நகர்ந்து விட்டது இன்னும் பல பாடங்கள் நான் படிப்பதற்கு முன்.. # பாடங்கள்தொடரும்

தனிமை கீதம்

Image
சிறு பறவை தாங்கிய கிளையின் தனிமை கீதம்.. யார் கேட்டது? சிறகு விரித்து பறவை பறந்ததும்,அந்தத் திசை நோக்கி அந்தக் கிளை ஆடியதே கடைசி.. அதன் பின் சலனமில்லை எந்தப் புயலுக்கும் செவி சாய்க்கவில்லை இதோ அந்தப் பறவையின் கால் தடங்கள் ஆறா வடுவாய் எந்த மழையும் அதை அழித்திடவில்லை.. தூக்கத்தில் கட்டிக் கொண்ட கால்கள் முத்தமிட்ட அலகுகள் கொத்தித் தின்றப் பழம் இவை எதையும் கிளை மறக்கவில்லை.. அந்த மரத்தில் பல கிளிகள் பல குயில்கள் கிளை மறுத்துவிட்டது! - ஹேமா படத்திற்கு நன்றி :  BalaGraphy

குட்டி கவிதைகள்

உதறி தள்ளியும் விழாமல் என் விரலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உன் நினைவு ***** நினைவு சாயம் வெளுக்காமல் இருக்க, குடை பிடித்து திரிகிறேன்.. கொஞ்சம், நிஜமென்னும் வெண்மை பூசிடு.. சற்று நனைந்துக் கொள்கிறேன் மழை முடிவதற்குள் *** கோடை வெயில் அவன் மேல் எல்லாம் வியர்வை துளிகள் மண் வாசனையுடன் மழை பெய்கிறது என்றேன் ஏதும் புரியாதவனாய் புன்னகைத்து நகர்ந்தான் புயலும் அடிக்கிறது என்றேன் திரும்பி‌ ஓர் பார்வை விடுத்தான் இப்பொழுது நான் ஏதும் பேசவில்லை மின்னல் தாக்கி வார்த்தைகள் தொலைத்த ஊமையாகி விட்டதால்..

நட்பெனும் பாதையிலே..

பார்த்தவுடன் புன்னகை ஒன்றைப் பரிமாறிக் கொள்ள, ஒரேப் பாதையில் இணைந்துக்கொண்டோம் கைக்கோர்த்து கவலைகள் மறந்து வண்ணங்கள் தீட்டிச் செல்கிறோம் வழி யாவும்.. வழியில், உடைந்த பட்டாம்பூச்சி சிறகை ஒட்டி பறந்தோடி கிணற்றில் போட்ட பழைய கனவை மீட்டு நம் கடமை மூட்டை சற்றே கணக்கும் போது தோள் கொடுத்து நினைவு கூழாங்கற்களை சேமித்துக் கொண்டே செல்கிறோம்.. நான் , நீ சோர்ந்தால் பூ மொட்டொன்று கொடுப்பேன் நீ, நான் சோர்ந்தால் சேமித்த மொட்டை மலராக்கி கொடுப்பாய் இப்படிதான் மொட்டெல்லாம் மலராகிறது இந்தப் பாதையில் என்றோ ஒரு நாள் நாம் பாதை மாறினால் இந்த மொட்டெல்லாம் மலராமலே போய் விடக்கூடும் அதற்காகவேனும் இனி சேமிக்கும் நினைவு கூழாங்கற்களை வழி நெடுக்க சிந்திக் கொண்டே போவோம் நாம் பாதை மறந்தாலும் அவை நம்மை இணைத்திடும் புன்னகை பூ பூத்து நட்பெனும் பாதையிலே..

போர் போர்

மாற்ற இயலாத ஞாபகங்கள் எனை ஆக்கிரமிக்க இரவின் தனிமையோ சுற்றி வளைத்தது எண்ண வாள் வீசி.. நான் தயாராக இல்லை! எனக்கும் எனக்கும் ஆனா இன்னுமோர் தூக்கம் தொலைத்த போரிற்கு.. மூளைக்கும் இதயத்திற்கும் போர் நடந்தால் நான் யார் பக்கம் நிற்பது?! என் வார்த்தை எடுபடவில்லை. போர் மூண்டது; மூளை நிதர்சனம் எனும் வாள் எடுத்து இதயத்தை கிழிக்க அவளோ பதிலுக்கு அன்பெனும் மாய வில் தொடுத்தாள்.. நடுநிசித் தாண்டியும் போர் நின்ற பாடில்லை நிராயுதபாணியாக நான்..! சட்டென, அவன் என்றோ ஒரு நாள் எனை பார்த்து சிரித்த சத்தம் கண்களின் வழியே ஊடுரும் நதியை துடைத்தது அவன் போட்ட சட்டை வந்து சேர்ந்தது கவசமாய் நிழற்படங்களோ சமாதான புறாவாய் போர் களம் காதல் தளமானது அடுத்தென்ன போரில் எனைக் காப்பாற்றியதற்கு அவனுக்கு நன்றி சொல்ல கிளம்பி விட்டேன் நித்திரை வாகனமெடுத்து..
வானவில் உடுத்தி மின்னல் மையிட்டு மண் வாச மழை தெளித்து காதில் விண்மீன் மிளிர முகில் மலர்களோ குழலில் மணக்க.. கைவளையலாய் சிறு பாறைகள் சிதற கதிரவன் கன்னத்தில் வண்ணமிட கடலன்னை அளித்தாள் சங்கு சிப்பிக் கால் கொலுசை.. இடி மேளம் முழங்க நிலா ரதம் ஏறி தென்றல் தோழி கதை கேட்டு காதல் தேவனை நோக்கி அவள்..

நெய்தல் -2

நாம் நுரையாடிய இடையே சற்று உரையாடிய அந்த கடல் அசையாது, நம் வருகையை எதிர்பார்த்து நாம் அணிந்த அலைகளும் கால் கட்டி அணைத்த மணலும் தனிமையில் வெறுமையாய் நாம் சேர்த்த சங்குகளை சிதரிவிட்டு வந்தேன் இனி அலைகள் ஓயாது... 

முதல் காதல்

***** புத்தக நடுவில் பத்திர படுத்திய   நீ தந்த ரோஜா   இன்றும் வாடாமல் **** கிழிந்த நிலையில்   பயண சீட்டு நினைவு படுத்தியது நம் முதல் பயணத்தை **** ஆண்டுகள் பத்தோடியும் மறக்கவில்லை எண்கள் பத்து உன் பழைய தொலைபேசி எண் **** நாள்காட்டி கிழிக்கையில்   உன் பிறந்தநாள் கோவில் சென்று வந்து விட்டேன் **** முகப்புத்தகத்தில் உன் முகம் பார்க்க   தவறவில்லை **** உன் பெயர் கேட்கையில் அன்னிச்சையாக திரும்பும் தலை ****

நெய்தல் - 1

Image
அவள் ஆச்சரியங்களின் உலகம் தேடல்களின் துவக்கம்   அவள் தட்டிக் கொடுப்பாள் தன்வசம் இழுப்பாள் கோபமாய் கொப்பளிப்பாள் அமைதியாய் ஆர்ப்பரிப்பாள் நெருங்குமுன் சத்தம் பாதிக் கடந்தால் நிசப்தம் மனித மூளைக்கு விளங்கிடாதப் புதிர் அவள் நீல வர்ணம் பூசிய அலங்காரி கருப்பும் பூசிக் கொள்ளும் மாயக்காரி சிலசமயம் கொள்ளைக்காரி பல உயிர்களின் சரணாலயம் பாடம் புகட்டும் பல்கலைக்கழகம் அவள் பார்க்க சலிக்காதவள் பரந்து விரிந்தவள் சூரியனையும் விழுங்குபுவள் நிலவின் குளிர்மையும் உடையவள் எச்சரிக்கை, அவள் மேல் காதல் மட்டும் கொள்ளாதே உன்னை மூழ்கடித்து விடுவாள் மூர்ச்சையாக்கிவிடுவாள் வேண்டுமென்றால் கட்டி அணைத்துக்கொள் ஓர் தாயை உணர்வாய் அவளிடம்! அவள்-கடல் 

பாலை - 1

பாலை யாழ் மீட்டி பருந்தோட்டும் ஒருத்தன் கேட்க செவியில்லை இசை மீட்டி என்ன பயன்? ஓயாமல் அடிக்கும் அனல் காற்றுடன் போட்டியோ? இரசவாதியோ? இல்லை இலட்சியவாதியோ? இருப்பை அடியில் இரும்பாய் ஒருத்தன்! ஊரும் பாம்பும் தேளும் அவனை தடவி செல்ல ஒரு புன்னகை உதிர்க்கிறான்! அவன் வளர்க்கும், செல்ல பிராணிகள் போலும்! கூவல் வேண்டாம் கானல் நீர் போதும் என்கிறான் திருடிய உணவெதற்கு கள்ளிப் பழம் போதுமென்கிறான் பறை அடித்துக் கொண்டே.. பறந்தலையில் எப்பொழுதும் அது ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.. கொற்றவை கேட்க! பிரிதலுக்கு பெயர் போன இடம் ஊடல் கொள்ளும் வரை அந்த சூறை கோட்பறை ஒளித்துக் கொண்டேதான் இருக்கும்.. அந்த வேனிற்காலம் முடிந்தே விட்டது ஆனால்,அவன் வாசிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.. குராப் பூவுடன் கலந்து வீசிய அந்த தனிமை கீதம் என்னைவிட்டு விலகவே இல்லை..

செங்கோல் பிறந்த கதை

அந்த சிறுவன் அடர்ந்த காடொன்றில் ஆடு வளர்த்திருந்தான்.. அன்பையும் .. மந்தை சேர்த்தான் பின் ஒருநாள், மாடு சேர்த்தான் பாடி திரிந்தான் கார் எல்லாம் மாரி பொழிய காட்டாறு பாடி சேரி ஓட மகிழ்ந்தானாம் ஆயர் அவன்.. களவு மறந்தான் கற்பு என்றான் தாய் வழி அழித்து தந்தை வழி வரைந்தான் ஆநிரை சேர ஆணவம் சேர ஆண் என்றான் அரசன் என்றான் இருத்தல் என்றான் பெண்கள் கடமைகளை ஆற்றி அடிமைகளாய் இருத்தல் என்றான் ஆநிரை கவர்ந்தான் வெற்றி என்றான் ஆணவம் ஏற்று வெறுப்பை பெற்றான் அவன் ஆடு மேய்த்த கோலை மட்டும் அவன் விடவே இல்லை அதன் பெயர் செங்கோல் என்றான் அந்த சிறுவன்!

காதலாகி கடலாகி

உப்புக் காத்து என ஒரசையில உன் வாசம் தடவிப் போகுதயா ஓயாம வீசும் அலகடலு, தோத்து நிக்குதிங்க என்கிட்ட அலையா அலையிறன் உனைத் தேடி கரையிறன் கலங்கரையா நான் நிக்க வழித் தேடி நீ வாரும்மையா நேரந்தான் கூடையிலே நெஞ்சமும் கொஞ்சம் கலங்குதையா பகல இரவு முழுங்குதையா நா சமைக்காத நண்டெல்லாம் நிம்மதியாய் வீடு சேர சமச்சதெல்லாம் நடு வீதி சேர.. சிப்பி தேடி அலையாத சீக்கிரமே நீ வாரும்மைய்யா.. முத்தெல்லாம் எனக்கெதுக்கு? உன் சிரிப்பேப் போதும்மைய்யா! கரையில மீனா நான் என் கடலே, உன் கடலுக்கு வெட கொடுத்து என தேடி வாரும்மையா.. என் கடைசி மூச்சுக்காத்த பரிசா நான் வச்சிருக்கேன்!

இப்படிக்கு கோடைக்காரி

எனக்கு வெயில் பிடிக்கும் கத்திரியில் குடை பிடிக்கா கோடை காதலி நான் உச்சி வெயிலில் ஊர்சுற்றி வெயிலின் வெம்மை பூசிக் கொள்ளும் விளையாட்டுகாரி நான்.. எனக்கு வெயில் பிடிக்கும் பள்ளிக்குப் பூட்டுப் போட்டு பாட்டி வீட்டு சாவிக்கொடுக்கும் வெயில் பிடிக்கும்.. எட்டுப் பெட்டியில் தொலைந்து பம்பரமாய் சுழன்று பரணில் ஒளிந்து கண்கட்டி ஓட முடியுமே அதனால், எனக்கு வெயில் பிடிக்கும்.. வேப்ப மர ஊஞ்சல் உலுக்கி புளியம்பூ,காய்,பழம் மென்று வெள்ளத்தில் கரைந்த வெள்ளரி, தொண்டைக் குழியில் வழுக்கும் பனங்காயுடன், மாங்காயின் புளிப்பை இனிப்பாய் சுவைக்க முடியுமே அதனால் எனக்கு வெயில் பிடிக்கும்.. உங்களுக்கும் வெயில் பிடிக்குமா? வரிசையில் நில்லுங்கள் வாழையிலை மடித்து சோளம் சேர்த்து வறுத்த அரிசி தருகிறேன் கொறித்துக்கொள்ள மல்லாட்டை கொல்லை போய் செடி பறிக்கலாம்.. கொடைக் கூலியாய் வெயிலில் காய்ந்து கருமை வாங்கி வரலாம்..

விடுமுறை எடுங்கள் விண்மீன்களே..

Image
பூட்டிய வீட்டை திறக்கையில் எங்கும் உன் வாசம் சட்டென கதவுகளை அடைத்துவிட்டேன்... ஜன்னல்களையும் தான்! உன் பாத சுவடுகள் ஏந்திய தூசி தரையையோ துடைக்க மனமில்லை, நீ அணிந்த ஆடைகளையோ துவைக்க மனமில்லை! சமையலறையில் நீ சமைத்து நான் சாப்பிட்ட கறை.. அஞ்சறை பெட்டியில் அடைத்து விட்டேன், அதன் ருசி முழுதையும்.. போர்வையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வியர்வை சொல்லும் கதைகளை தலையணை அடியில் பத்திர படுத்திவிட்டேன்.. கட்டிலுக்கு காதில்லையே? சுவரெங்கும் நாம் சேர்ந்து கிறுக்கிய சித்திரம், கண்ணாடியில் உன் கைரேகை, தொட்டியில் சிரித்திடும் நாம் வளர்த்த ரோஜா, சீப்பில் உன் தலை முடி, விழுந்து உடைந்து கிடக்கும் உன் சட்டை பட்டன், அலமாரி புகைப்படத்தில் சிரிக்கும் நீ.. உன் நினைவே வேண்டாமென்று மாடிக்கு ஓடினேன்.. அங்கு எனைப் பார்த்து கண் அடிக்கின்றது நாம் சேர்ந்து எண்ணிய விண்மீன்கள்..

மூங்கில் காடு

Image
ஓங்கி வளர்ந்திருக்கும் புல்லாங்குழல் உலகம் அந்தப் புற்களின் பச்சை உடுத்தி ஓடுகிறாள் ஒவ்வொரு அசைவிலும் இன்னிசை மீட்டுகிறாள் என் கைப்பிடித்து இழுத்துப் போகிறாள் அவள் பாதம் பட்டு சறுகுகள் உடையவில்லை மூங்கில் உதிர்த்தது பச்சை இலைகளை அவள் மென்மை பாதம் பட கிளைகளும் வளைந்து அவள் கேசம் தொட முயற்சித்து என் கூந்தல் கோதிச் சென்றது நான் கிளை கை பிடித்து ஊஞ்சலாடினேன் விட்டு விடவில்லை அவள் திரும்ப வந்து கைக்கோர்த்துக் கொண்டாள் தூரத்துப் பறவை காட்டும் ஆசை காட்டி இருவரும் ஓடினோம் ஒற்றையடிப் பாதையிலே இப்பொழுது அவளை விட என் கால்கள் வேகம் எடுக்கத் தொடங்கின கதிரவன் கைத்தட்டல் இலைப் போர்வையின் ஓட்டை வழி ஒளித்தது ஒளி கண் கூச கண்மூடினேன் ஒரு வினாடியில் அவள் மறைந்துவிட்டாள் காடு முடிந்துவிட்டது என் கால்கள் மட்டும் வந்த வழியிலே திரும்பி ஓடிக் கொண்டே இருக்கிறது அந்த முடிவில்லா மூங்கில் காட்டில் ஓடிக் கொண்டே இருக்கும், இயற்கைத் தோழியின் மேல் இருக்கும் காதல் தீரும் வரை.... அவள் திரும்ப வந்து என் கைப்பிடிக்கும் வரை...

திண்ணை வைத்த வீடு

"மறதி எனும் கொடிய வியாதி எனைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்ள சிறிது சிறிதாய் சிதைந்து கொண்டும் மண்ணில் புதைந்து கொண்டும் இருக்கிறேன் இதோ காலன் வரும் சத்தம் அவன் வருவதற்குள் என் கதை சொல்கிறேன்", என்றார் அவர் கதை கேளு பெண்ணே கதை கேளு மாட மாளிகையா கூரை கொட்டகையோ நானின்றி அவையில்லை அந்தக் காலத்திலே அவ்வளவு காதல் இருவருக்கும் எனைக் கட்டி அணைத்து உறங்கிப் போவர் சிலர் பஞ்சு மெத்தை விடுத்தே என் மடித் தேடி இளைப்பாறி செல்வர் சிலர் என்மேல் அவர்கள் பாரத்தை இரக்கி வைத்தே நிம்மதி அடைவர் பலர் நட்பின் இலக்கணம் நாங்கள் தெருக் குழந்தைகளுக்கோ என்மேல் கொள்ளை விருப்பம் எப்போதும் வந்து ஒட்டிக் கொள்வர் என் கைக்கோர்த்து சுற்றி வருவர் என் முகத்தில் கட்டமிட்டு என் கைகளில் கல் வைத்து எனப் பல விளையாட்டு விளையாடி மகிழ்வோம் மங்கையர்களோ என்னை அவர்கள் குழந்தையென தினமும் குளிப்பாட்டி சித்திரமிட்டு பலக் கதைப் பேசி மகிழ்வர் ஊரில் நடக்கும் அத்தனைக் கதைகளும் முதலில் என் காதிற்கே அது ஒருக்காலம் பெண்ணே நானின்றி வீடில்லை ஆனால் நவீன மாந்தர்களோ என் காதலியை என்னிடம்...

நான் சேமித்த அவன்

Image
அவன், எனை கடக்கையில் காணாது செல்வான் பின் பத்தடி கடந்து திரும்பி ஓர் குழந்தையின் சிரிப்பை காற்றில் மிதக்க விட்டு செல்வான் கண் கொட்டாமல் நான் அவனை காண்பதை கண்டு! அது அன்பின் புன்னகையோ, அலட்சியப் புன்னகையோ ஆராய்ச்சி எதற்கு? என் கடைமை அவைகளை சேமிப்பதே இதோ இன்னுமோர் புன்னகையை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன் அவன் சட்டையின் நிறம் பார்த்து என் மூளையில் ஏற்றிக் கொள்வது என் பொழுதுப் போக்கு தினமும் உடை அணியும் போதெல்லாம் அவன் சட்டை வண்ணம் எண்ணிப் பார்த்து பல கணிப்பு நெறிகளை இட்டு அணிவதே வழக்கம் என்றோ ஓர் நாள் எங்கள் இருவரின் உடை நிறம் பொருந்திவிட்டால் வானுக்கும் பூமிக்கும் குதித்து அந்த நாளையும் நிறத்தையும் சேமித்து வைத்துக் கொள்வேன் அவன், அறிந்து இருக்க வாய்ப்பில்லை அவனுடைய கடிகாரம் என் கையாள் என்று அவன் நாள் முழுதும் எனக்கு அத்துப்படி என்று அட்டவணைப் போட்டு சேமித்து வைத்துக் கொண்டேன் அவன் பேசும் வார்த்தைகளைக் கேட்கவே அவன் நண்பன் ஒருவனை நண்பனாக்கிக் கொண்டேன் ஆனால் கள்ளன் அவனோ எனை விடுத்து அனைவரிடமும் பேசுவான் யாரிடம் பேசினால் என்ன என் கடமை அவன் ...

இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு?

Image
அவள், மயிலிறகு குட்டிப் போடும் என்பாள் அவன், பென்சில் சீவீ தூள் கொடுப்பான் அவள், கண்ணாமூச்சி ஆடலாம் வா என்பாள் அவன், அவள் கண் முன்னே ஒளிந்துக் கொள்வான் அவள், மழையில் கப்பல் விடலாம் என்பாள் அவன், அவளுக்கு வாழையிலை வைத்துக் குடை பிடிப்பான் அவள், கலர் கோழி வளர்த்தாள் அவன், கழுகோட்டினான் அவள், கொட்டாங்குச்சி வைத்து சோறாக்கினாள் அவன், அவள் உண்ட மிச்சம் உண்டான் அவள், புளியங்காய் தின்ன அவன் மரமேறுவான்.. அவள், நதியில் குளிக்க அவன், மீன்களின் கண் மூடுவான் இப்படி அப்படியாக அவன் அவளுக்காக அன்பை பொழிய அது எளிமையாகவும் அழகாகவும் அந்த தேசமெல்லாம் வழிந்தோடியது... அதுவே பின்னோர் காலத்தில் யமுனா என்றழைக்கப் பட்டதாகவும் அங்கே அவர்களுக்காக ஒரு காதல் சின்னம் நிறுவப்பட்டதாகவும் ஒரு வரலாறு!!! 😉 #புனைவு - ஹேமா