திண்ணை வைத்த வீடு


"மறதி எனும் கொடிய வியாதி
எனைக் கொஞ்சம் கொஞ்சமாக
ஆட்கொள்ள
சிறிது சிறிதாய் சிதைந்து கொண்டும்
மண்ணில் புதைந்து கொண்டும்
இருக்கிறேன்
இதோ காலன்
வரும் சத்தம்
அவன் வருவதற்குள்
என் கதை சொல்கிறேன்",
என்றார் அவர்

கதை கேளு பெண்ணே
கதை கேளு
மாட மாளிகையா
கூரை கொட்டகையோ
நானின்றி அவையில்லை
அந்தக் காலத்திலே
அவ்வளவு காதல் இருவருக்கும்

எனைக் கட்டி அணைத்து
உறங்கிப் போவர் சிலர்
பஞ்சு மெத்தை விடுத்தே
என் மடித் தேடி
இளைப்பாறி செல்வர் சிலர்
என்மேல் அவர்கள்
பாரத்தை இரக்கி
வைத்தே நிம்மதி
அடைவர் பலர்
நட்பின் இலக்கணம் நாங்கள்

தெருக் குழந்தைகளுக்கோ
என்மேல்
கொள்ளை விருப்பம்
எப்போதும் வந்து ஒட்டிக்
கொள்வர்
என் கைக்கோர்த்து
சுற்றி வருவர்
என் முகத்தில் கட்டமிட்டு
என் கைகளில் கல் வைத்து
எனப் பல விளையாட்டு
விளையாடி மகிழ்வோம்

மங்கையர்களோ
என்னை அவர்கள் குழந்தையென
தினமும் குளிப்பாட்டி
சித்திரமிட்டு
பலக் கதைப் பேசி மகிழ்வர்
ஊரில் நடக்கும்
அத்தனைக் கதைகளும்
முதலில் என் காதிற்கே

அது ஒருக்காலம் பெண்ணே
நானின்றி வீடில்லை
ஆனால் நவீன மாந்தர்களோ
என் காதலியை என்னிடம்
இருந்து பிரித்துவிட்டனர்
என்று கதை முடித்து
கண்ணீர் சிந்தினார்
திண்ணை எனும் தாத்தா

நான் ஓடிப் போய்
அவரை கட்டி அணைத்துக்
கொண்டேன்
தூரத்தில்
ஒரு வாகனம் வந்துக்
கொண்டிருந்தது
இந்தப் பழைய வீட்டை இடிக்க..!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!