நான் சேமித்த அவன்

அவன்,
எனை கடக்கையில் காணாது செல்வான்
பின் பத்தடி கடந்து திரும்பி
ஓர் குழந்தையின் சிரிப்பை
காற்றில் மிதக்க விட்டு செல்வான்
கண் கொட்டாமல் நான்
அவனை காண்பதை கண்டு!
அது அன்பின் புன்னகையோ,
அலட்சியப் புன்னகையோ
ஆராய்ச்சி எதற்கு?
என் கடைமை அவைகளை சேமிப்பதே
இதோ இன்னுமோர் புன்னகையை
பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன்

அவன்
சட்டையின் நிறம் பார்த்து
என் மூளையில் ஏற்றிக் கொள்வது
என் பொழுதுப் போக்கு
தினமும் உடை அணியும் போதெல்லாம்
அவன் சட்டை வண்ணம்
எண்ணிப் பார்த்து
பல கணிப்பு நெறிகளை இட்டு
அணிவதே வழக்கம்
என்றோ ஓர் நாள்
எங்கள் இருவரின் உடை நிறம்
பொருந்திவிட்டால்
வானுக்கும் பூமிக்கும் குதித்து
அந்த நாளையும் நிறத்தையும்
சேமித்து வைத்துக் கொள்வேன்

அவன்,
அறிந்து இருக்க வாய்ப்பில்லை
அவனுடைய கடிகாரம்
என் கையாள் என்று
அவன் நாள் முழுதும் எனக்கு
அத்துப்படி என்று
அட்டவணைப் போட்டு
சேமித்து வைத்துக் கொண்டேன்

அவன்
பேசும் வார்த்தைகளைக் கேட்கவே
அவன் நண்பன் ஒருவனை
நண்பனாக்கிக் கொண்டேன்
ஆனால் கள்ளன் அவனோ
எனை விடுத்து அனைவரிடமும் பேசுவான்
யாரிடம் பேசினால் என்ன
என் கடமை
அவன் வார்த்தைகள் சேமிப்பதே
சேமித்து வைத்துக் கொண்டேன்

அவன்,
பார்வை என் மேல் படவே
பல முறை நடித்து
தடுக்கி விழுந்திருக்கிறேன்
பார்வை பட்டதும்
நடிப்புத் தோற்று
மீண்டும் ஓர் முறை
விழுந்துவிடுவேன்
மின்னல் பார்வையிலே
பிறகென்ன
அந்த மின்னல்களை சேமித்துக் கொள்வேன்



இப்படி நான் சேமிப்பது நின்ற பாடில்லை
என்றோ ஓர் நாள் என் காட்டில் பஞ்சம் வரலாம்
அன்று அவன் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருப்பான்
அன்றோர் நாள் நான் உயிர் வாழ வேண்டுமே
அந்த நாளைக் கடக்க இந்த சேமிப்பு போதுமானதாக இருக்குமா?
சந்தேகத்துடன்,
சேமிக்க சென்றேன் அவன் மேல் பட்டக் காற்றை!

#அவன்அவள்கதை

-தொடரும்

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!