மதில் மேல் பூனை

கிழிக்கும் கண்ணாடிச் சுவர்
இழுக்கும் அலை ஒருபக்கம்
கொதிக்கும் உலை ஒருபக்கம் 
ஈர்க்கும் விசையோ இருபக்கம்

உலையில் வெந்துச் சமைவேனோ
அலையில் விழுந்துத் தொலைவேனோ
விசையை ஏமாற்றும் வித்தை அறிவேனோ
தசையைக் கிழிக்கும் காயம் மறவேனோ

உலையின் வெப்பம் தணியலாம்
அலையின் வேகம் குறையலாம்
விசையின் திசை மாறலாம்
கண்ணாடி பூக்கள் ஆகலாம்

ஆதலால்,
நடைப் பழகிக் கொள்கிறேன்
நடனமும் பயில்கிறேன்
குத்திக் கிழிக்கும் கூர்முனை மேல்..

சிந்தும் இரத்தத்தால்
சுவரெல்லாம் விரிசல்!
விரிசல் சுவர்
விறுக்கென உடையலாம்
அதற்குள்,
அலையிலே நீந்தப் பழகியிருப்பேன்
உலையிலேப் பக்குவமடைந்திருப்பேன்..

அது வரைக்
கால்களில் இரத்த வெள்ளம்
மட்டுமே உறுதி!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!