கறை

*கறைப் படிந்துக் கொண்டே இருக்கும்*
உதிரம் கண்டு வாழ்வின் கடைசி நாள்
இதுவோ எனக் கதறி அழுத
அந்நாளை நினைக்கையில்..
கட்டிலறை வீட்டின் வெளியேயாகி அம்மாவை
கட்டியணைத்துத் தூங்கமுடியா நாட்களில்..
நடுங்கும் குளிரிரவு
உலக்கை
தென்னை ஓலை
குடுகுடப்பு சத்தமாய்
கடந்த இரவுகளை எண்ணுகையில்..
இரத்ததின் நிறம் நீலமாய்,
வலி விளம்பரமாகையில்..
அத்தியாவசிய அணையாடையை
சைகையில் கேட்டு பழகுகையில்..
புத்தகம் வைத்து
பாவாடை மறைக்கையில்..
பிடித்த வெள்ளை ஆடை ஒதுக்குகையில்..
மாதத்தில் ஒருநாள் விடுப்பு எடுக்க
உண்மை காரணம் மறைத்து
நொண்டிக் காரணம் தேடுகையில்..
கோபமும் எரிச்சலும் மறைத்து
கோமாளியாய் சிரிக்க பழகுகையில்..
நண்பன் நலம் விசாரிக்க
கூச்சத்தோடு ஊமையாகையில்..
ஆசையாய் வளர்த்த துளசிக்கு
அருகில் ‌போக தடைப்போடப் படுகையில்..
தேளும் பூராணும்
ஈர்க்கும் இரையாகிப் போகையில்..
சாமிக்கூட சற்றுத் தள்ளி வைக்கையில்...
புனிதம் தீட்டாகையில்..
கறைப்படிந்துக் கொண்டே இருக்கும்‌
உதிரத்தில் தோய்த்த உணர்ச்சிக்கறை..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!