*A letter to my Raj*

*A letter to my Raj*
ஆண்டுகள் பத்தாயிற்று உனக்கான கடைசிக் கடிதம் நானெழுதி.
உன் வியர்வை வாசத்தையும் உன் விரல் எழுத்தோவித்தையும் தொலைப்பேசியால் தொலைத்தேவிட்டேன். அதனால் கிராகாம் பெல் மீதெனக்கு கோபமே!
உன் கடிதத்தை பிரித்தவுடன் என்றும் என் கண் பின்குறிப்பை நோக்கியே ஓடும். "அன்பு கண்மணிக்கு ஆயிரம் முத்தங்கள்" என்றே அது என்றும் சொல்லும். இத்துனை வருடங்களில் எத்தனை ஆயிராமாயிம் முத்தங்களை நானியழந்து விட்டேன். அத்துனையும் மீட்டெடுக்கவே உனக்கிந்த ஒற்றை கடிதம்.
நான் அம்மாவின் செல்லப் பெண் என்றே ஊர் சொல்லும். அவர்களுக்கு தெரியாது ஏன் உனக்கும் கூடத் தெரியாது எனக்கு அம்மாவின் சேலை அணிவதை விட உன் சட்டையணிவதே கொள்ளை விருப்பமென. உன் அலமாரியில் காணாமல் போன சட்டை இதோ என் பெட்டியில் பத்திரமாய்.
என்றும் என் கைபிடித்து எனை நீ அழைத்து சென்றதில்லை. முதலில் வருத்தம் பின்னர் புரிந்துக் கொண்டேன் என் முன் சென்று எனக்கானப் பாதையை நீ செப்பனிடுகிறாய் என்று.
பள்ளி விழாக்களிலோ பட்டமளிப்பு விழாவிலோ என் பக்கம் நீ நின்றதில்லை. கோபம் தான் உன் மீதெனக்கு. பின் அறிந்தேன்.. எனை செதுக்க உழைத்து களைப்பவன் நீயென. வைரத்தை பட்டம் தீட்டிய கத்தியை யாரும் அறிவதில்லை. என் ஆசையெல்லாம் என் உளி நீயென இந்த உலகத்திற்கு ஒருநாள் கத்தி அறிவிப்பதே..
உணவு போதுமென்று நான் கூறினாள் அம்மா மீதமுள்ள சட்டினிக்கு தோசை வைத்துக் கொள் என்பாள் நீயோ உன் தட்டில் உள்ள தோசையை எனக்கு பிட்டு ஊட்டுவாய்.. அம்மா சமையல் சரியில்லை சரிபார் எனப் பொய் காரணம் கூறி! உன் அன்பில் நனைத்த அந்த தோசையின் அமிர்த சுவையை பற்றி என்றுமே நானுனக்கு கூறியது இல்லை..
நீ தான் என்றும் என்‌ குரு என.. உன் குணாதிசயங்களை நகல் எடுத்து இன்றும் நானென்னுள் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என.. என் முதல் தோழன் நீயென.. உன் இளவரசியின் ராஜா நீயென.. என் கவலைகளின் தீர்வு குழப்பங்களின் தெளிவு.. என் மூன்றெழுத்து தாரக மந்திரம் நீயென உன்னிடம் உரைத்ததே யில்லை..
உன்னை பார்த்து தான் நான் காதலிக்க கற்றுக்கொண்டேன். உன் அளவற்ற காதலின் முன் நானென்றும் தோற்றே நின்றேன்.. ஒரே ஒரு நாள் நான் நீயாய் நீ நானாய் இடம்மாறிக் கொள்ளலாம்.. இப்படி தன்னலமற்று வாழ்வதெப்படி யென்று மட்டும் நான் கற்றுக் கொள்கிறேன் உன்னிடம்...
- இப்படிக்கு
நீயெழுதிய கடிதங்களின் சேமிப்பை புரட்டிக் கொண்டே உன் ஆயிரமாயிரம் முத்தங்களில் நனைந்துக் கொண்டே உன் செல்ல மகள்..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!