விடுமுறை எடுங்கள் விண்மீன்களே..

பூட்டிய வீட்டை திறக்கையில்
எங்கும் உன் வாசம்
சட்டென கதவுகளை
அடைத்துவிட்டேன்...
ஜன்னல்களையும் தான்!
உன் பாத சுவடுகள் ஏந்திய
தூசி தரையையோ
துடைக்க மனமில்லை,
நீ அணிந்த ஆடைகளையோ
துவைக்க மனமில்லை!
சமையலறையில்
நீ சமைத்து
நான்
சாப்பிட்ட கறை..
அஞ்சறை பெட்டியில்
அடைத்து விட்டேன்,
அதன் ருசி முழுதையும்..
போர்வையோடு
ஒட்டிக்கொண்டிருக்கும்
வியர்வை
சொல்லும் கதைகளை
தலையணை அடியில்
பத்திர படுத்திவிட்டேன்..
கட்டிலுக்கு காதில்லையே?
சுவரெங்கும் நாம்
சேர்ந்து கிறுக்கிய சித்திரம்,
கண்ணாடியில் உன் கைரேகை,
தொட்டியில் சிரித்திடும் நாம்
வளர்த்த ரோஜா,
சீப்பில் உன் தலை முடி,
விழுந்து உடைந்து கிடக்கும்
உன் சட்டை பட்டன்,
அலமாரி புகைப்படத்தில் சிரிக்கும் நீ..
உன் நினைவே வேண்டாமென்று
மாடிக்கு ஓடினேன்..
அங்கு எனைப் பார்த்து கண் அடிக்கின்றது
நாம் சேர்ந்து எண்ணிய விண்மீன்கள்..


Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!