எட்டாம் திணை

திணைகள் ஏழும் கசந்து
எட்டாம் திணை ஒன்றில்
ஊஞ்சலாடுகிறேன்..

இரவுகளனைத்தும்
பெரும்பொழுதிங்கே
சிந்திக்காத நேரங்களோ
சிறுபொழுது..

விதைத்த அன்பின்
அறுவடைக்காக காத்திருத்தலும்
உடைந்த இதயத்தை மீண்டும்
ஒட்டவைத்தலுமே தொழில்கள் இங்கே..

தூக்கம் தொலைத்த கூகையும்
தூரத்தில் குரைக்கும் ஓநாய்களும்
நியூட்டனின் ஆப்பிள் ‌மரமும்
சாகா பாவோபாப் மரமும்
சுறுசுறு வாகை மலரும்
சோம்பேறி காக்டஸ் மலரும்
வால்கா நதிக்கரையும்
மெசொப்பொத்தேமிய நாகரீகமும்
கற்பனையில் கட்டி இன்னும்
பெயரிடாத ஊர்களும்
வேடிக்கை மாந்தர்களும்
வேற்றுகிரக வாசிகளும்
கருப்பொருட்கள் இங்கே..

சிந்தித்தலும் சிந்தித்தல் நிமித்தமும்
இரண்டாம் உலகம் ஒன்றில்
நிஜம் மறந்து தொலைதல் கூடும்
கேலிப்பேச்சுகள் பறையோசையாகும்
குறிஞ்சியாய் குரல்கள் சில யாழ்மீட்டும்..

கண்ணாம்பூச்சி இங்கு வீரவிளையாட்டு...
இதோ..
கண்களை மூடி எனையே நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்! 

இருந்தும்,
இனிப்பாகத்தான் இருக்கிறது
தனிமையும் தனிமை சார்ந்த இடமும்!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காலம் சிறியது!

அவள்-கடல் ❤️