புதைக்கும் பூக்கள்

எழும்ப எழும்ப எனை
அழுத்திப் புதைக்கும் பூக்கள்!
ஆயிரமாயிரம் கட்டுப் பூக்களின் சுமை
கணக்கத்தானே செய்யும்?

உடல் சுற்றியிருக்கும் அத்தனைப் பூக்களை
உதறிவிடவே ஆசை ஒரே குலுக்களில்
குலுக்கக் குலுக்க மென்மேலும்
கொட்டப்பட்டுக் குவியும் பூக்கள்

பூக்களுக்கு வண்ணமிட்டு
வாடாமல் நீர்விட்டு
நேர்த்தியாய் அடுக்கி
சவரம் செய்து
தேவையெனில் சிகிச்சைகள்
பார்த்துக்கொள்வதே வேலை

கனவுகள் தொலைத்து வாய் தைத்து
தேடல் மறந்து கோபம் ஒளித்து
சாயம் பூசி மாறுவேடமணிந்து
சிரிக்கும் பூக்களுக்கு
மென்மை,பணிவு,அழகு,அடக்கம்
என விதவிதமானப் பெயர்கள்!

போலிப் பூக்கள் இவைகளை
சூடியே வாடிவிட்டேன்...
வேண்டுவதெல்லாம்
அடர் வனமும் உடை வாளுமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!