Posts

Showing posts from November, 2018

வலியதிகாரம்

கட்டிய கனவொன்றை கலைத்து கல்கல்லாய் உடைத்து உடைத்தக் கையின் உதிரத்தை வறண்ட உதட்டிலே நிரப்பி உன் எச்சில் படிந்த கன்னங்களைக் கண்ணீரால் அழுத்தி துடைத்துத் தோர்த்து இமையிரண்டின் நடுவில் நிற்குமுன் பிம்பத்தை மறைக்க என்னுலகை இருளாக்கி அகராதியெல்லாம் உன் மொழியானதால் ஊமையாகி வாயடைத்து விரல் கோதிய கேசத்தில் வாசம் பூட்டி.. முடியாமல் முத்தப் பதியமிட்ட தேகத்தில் பட்ட முளைகளை களையாமல் உன் நெற்றி வேர்வை சேர்த்த வெற்றுக் கோப்பையை நுகர்ந்தே தாகம் தீர்த்து நெஞ்சக்குழியில் நீ வைத்த பூந்தோட்டத்தில் மிச்சமிருக்கும் சருகை மெல்ல தின்று இறுக அணைத்திருக்கையில் என் மேல் தைத்த உன் தேகம் பிய்த்து எடுத்ததால் வழிந்த குருதியோடும்.. ஆறுபோகம் அறுவடை செய்து நித்தமும் தின்று செரித்த நினைவுகளின்  வாடையோடும்.. இறந்தே கிடக்கின்றேன் நான்!

கைரேகை ஓவியம்

வெள்ளைக்காகிதம் எனை கைரேகை ஓவியங்களால் நீ நித்தமும் நிரப்புகிறாய் விரல் தூரிகையால் உணர்வுகள் குழைத்து மோகப்படங்கள் வரைகிறாய் மென்தேகம் கடந்து திசுக்களிலும் அணுக்களிலும் ஒரே ஓவியங்கள் வரைபவனில்லை நீ ஒவ்வொன்றும் புதுநிறம் இரவின் கருப்பு, நிறங்களை விழுங்க முயன்று தினமும் தோற்றே நிற்கும்! ஓவியங்களில் லயித்து உணர்ச்சிகளால் உணர்வற்று இருக்கும் என்மேல் ஓடும் உவர் ஜீவநதியால் ஓவியங்கள் அழிவதில்லை அவைகளின் ஈரம் காய்வதுமில்லை..

நானெனும் நீ

நடுங்கும் ஓர் குளிரிரவில் நரம்புகள் கிழிக்கும் ஞாபக ஈட்டியால் நினைவு மெத்தைக்குள் பொதிந்தே நீர் கோலமிடுகிறேன் போர்வையில்.. சிந்தும் துளியெல்லாமுன் பிம்பம் சித்தன்னவாசல் ஓவியமாய் அது மாயை ஆனால் மறுக்கும் அறிவியல் மறந்த மனம் சுயமே மறந்த மனமாதலால் திரட்டியத் துளிகள் சேர்த்து ஞாபக மூட்டையை பிரித்து ஒவ்வொன்றாய்த் துவைத்து அலசி அடித்துக் கசக்கிப் பிழிந்த பின்னும் அதில் இன்னும் ஒரு சொட்டு ஞாபகம் ஒரு சொட்டின் தொடர் வினையால் மறு கணமே மூட்டை நிறையும் வினைப்பயனால் கூடும் கனம் மூட்டை சுமந்தே தேய்ந்த முதுகெலும்பை முட்டியே உள்நுழையும் ஞாபகக்கூறுகள் மச்சில் கலந்து பின்னதைக் குடைந்து நெஞ்சின் உள்ளே நுழைந்து வெடிக்கும் வெடித்தத் துகள்கள் உதிரத்தில் குழைந்த அடுத்த நொடி நானெல்லாம் நீயாகிப் போகும்!!!

மனப் பட்டாம்பூச்சிகள்

உன் கண்சிமிட்டலைக் கண்டுதான் என் மனப் பட்டாம்பூச்சிகள் பறக்கப் பழகுகின்றன தொண்டைக்குழியில் ஓராயிரம் வார்த்தைக் கருக்கள் உன் ஒலி குடித்தே நித்தமும் வளர்கின்றன விடாமல் பற்றி எரியுமென் மனதில் உன் புன்முறுவல்கள் எண்ணெய் ஊற்றுகின்றன வியர்வைத் துளியில் தலைத் துவட்டி மலர விரல் மொட்டுகள் காத்துகிடக்கின்றன உனக்கும் எனக்குமான இடைவெளியில் விடையற்ற வினாக்கள் ஜனித்து மரிகின்றன உயிரில் பாதியை காற்றில் கரைத்து உன்னுள் அனுப்புகிறேன் இணையாத நம் துருவங்களை இணைக்கும் முயற்சியில்... கரையணைக்கக் கடல் தூதுவிடும் அலையாய் நினைவலைகள் தூதுவிட்டே நித்தமும் வாழ்கிறேன் தனித்தீவாய்!

மௌனமொழி

என் பிரபஞ்சம் அனைத்தும் உன் சாயல் பூசியே திரிவதால் எங்கும் நிசப்தம்.. உன் அமைதியால் நான் நடமாடும் மயானக்காடாகி போனேன்! உன் மௌனக்கடலில் நீச்சல் பழகுகிறேன் என் வெறுமையை தீர்க்கும் வார்த்தை முத்தொன்றெடுக்க மூழ்கியும் தொலைகின்றேன்! மழலையின் முதல் குரல் கேட்கத் தவிக்கும் தாயாய் வராதா கடிதமொன்றுக்காக காத்துக்கிடக்கும் தபால் பெட்டியாய் ஏங்கி நான் கிடக்கிறேன்! நீ என்றோ பேசிய வார்த்தைகள் அனைத்தையும் சலவை செய்தே அதன் சாயம் வெளுத்தாகிவிட்டது.. நூலிழைகள் பிரிந்து பஞ்சாகி காற்றில் பறந்தோடி விட்டது! எஞ்சியிருக்கும், உன் மௌனங்களை மொழிப்பெயர்த்தே நான் வார்த்தைகளை மறக்கிறேன்! நான் முழுமையாய் பேச மறப்பதற்குள் ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு! இந்தப் பிறவி கடப்பதற்கு போதுமானதாய் ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு! ஆயிரம் ஆறுதல் கேட்டும் ஆறாத காயம் தீர்க்க ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு! பிழைத்துக் கொள்கிறேன்..

எட்டாம் திணை

திணைகள் ஏழும் கசந்து எட்டாம் திணை ஒன்றில் ஊஞ்சலாடுகிறேன்.. இரவுகளனைத்தும் பெரும்பொழுதிங்கே சிந்திக்காத நேரங்களோ சிறுபொழுது.. விதைத்த அன்பின் அறுவடைக்காக காத்திருத்தலும் உடைந்த இதயத்தை மீண்டும் ஒட்டவைத்தலுமே தொழில்கள் இங்கே.. தூக்கம் தொலைத்த கூகையும் தூரத்தில் குரைக்கும் ஓநாய்களும் நியூட்டனின் ஆப்பிள் ‌மரமும் சாகா பாவோபாப் மரமும் சுறுசுறு வாகை மலரும் சோம்பேறி காக்டஸ் மலரும் வால்கா நதிக்கரையும் மெசொப்பொத்தேமிய நாகரீகமும் கற்பனையில் கட்டி இன்னும் பெயரிடாத ஊர்களும் வேடிக்கை மாந்தர்களும் வேற்றுகிரக வாசிகளும் கருப்பொருட்கள் இங்கே.. சிந்தித்தலும் சிந்தித்தல் நிமித்தமும் இரண்டாம் உலகம் ஒன்றில் நிஜம் மறந்து தொலைதல் கூடும் கேலிப்பேச்சுகள் பறையோசையாகும் குறிஞ்சியாய் குரல்கள் சில யாழ்மீட்டும்.. கண்ணாம்பூச்சி இங்கு வீரவிளையாட்டு... இதோ.. கண்களை மூடி எனையே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!  இருந்தும், இனிப்பாகத்தான் இருக்கிறது தனிமையும் தனிமை சார்ந்த இடமும்!

புதைக்கும் பூக்கள்

எழும்ப எழும்ப எனை அழுத்திப் புதைக்கும் பூக்கள்! ஆயிரமாயிரம் கட்டுப் பூக்களின் சுமை கணக்கத்தானே செய்யும்? உடல் சுற்றியிருக்கும் அத்தனைப் பூக்களை உதறிவிடவே ஆசை ஒரே குலுக்களில் குலுக்கக் குலுக்க மென்மேலும் கொட்டப்பட்டுக் குவியும் பூக்கள் பூக்களுக்கு வண்ணமிட்டு வாடாமல் நீர்விட்டு நேர்த்தியாய் அடுக்கி சவரம் செய்து தேவையெனில் சிகிச்சைகள் பார்த்துக்கொள்வதே வேலை கனவுகள் தொலைத்து வாய் தைத்து தேடல் மறந்து கோபம் ஒளித்து சாயம் பூசி மாறுவேடமணிந்து சிரிக்கும் பூக்களுக்கு மென்மை,பணிவு,அழகு,அடக்கம் என விதவிதமானப் பெயர்கள்! போலிப் பூக்கள் இவைகளை சூடியே வாடிவிட்டேன்... வேண்டுவதெல்லாம் அடர் வனமும் உடை வாளுமே!

மதில் மேல் பூனை

கிழிக்கும் கண்ணாடிச் சுவர் இழுக்கும் அலை ஒருபக்கம் கொதிக்கும் உலை ஒருபக்கம்  ஈர்க்கும் விசையோ இருபக்கம் உலையில் வெந்துச் சமைவேனோ அலையில் விழுந்துத் தொலைவேனோ விசையை ஏமாற்றும் வித்தை அறிவேனோ தசையைக் கிழிக்கும் காயம் மறவேனோ உலையின் வெப்பம் தணியலாம் அலையின் வேகம் குறையலாம் விசையின் திசை மாறலாம் கண்ணாடி பூக்கள் ஆகலாம் ஆதலால், நடைப் பழகிக் கொள்கிறேன் நடனமும் பயில்கிறேன் குத்திக் கிழிக்கும் கூர்முனை மேல்.. சிந்தும் இரத்தத்தால் சுவரெல்லாம் விரிசல்! விரிசல் சுவர் விறுக்கென உடையலாம் அதற்குள், அலையிலே நீந்தப் பழகியிருப்பேன் உலையிலேப் பக்குவமடைந்திருப்பேன்.. அது வரைக் கால்களில் இரத்த வெள்ளம் மட்டுமே உறுதி!

சல்லாப எலிகள்

சாளரம் கிழித்து கன்னம் வருடும் காற்று கூடவே காதிலோடும் கானம் இமைகள் இணைந்திட துடிக்க இதயம் திடுக்கிட்டு உரக்க உரைத்தது, "இதுப் பேருந்து.. ஒட்ட படாத ஓட்டைகளில் சல்லாப எலிகள் வாலாட்டலாம் அரிக்கும் அதன் விரல்கள் புதிதாய் ஓட்டையும் போடலாம் கண்காட்சி பொருளாவாய் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒருயிடமும் மிச்சமில்லாமல்.. அனுமதியின்றி அத்துமீறி அந்தரங்கம் தொட நினைக்கும்.. துப்பட்டா கவசமெல்லாம் செல்லாது போர்வையையும் துளையிடும் காமூக எலிகளிடம்! கண்ணாடி திரையிட்ட பார்வையோ அங்குலம் அங்குலமாக உடலை அளக்கும் அதன் விரல்‌ புழுக்களோ நீண்டு நெளிந்து ஆடையின் முடிவுகளிலே நுழைந்திட துடிக்கும்.. கண்விழித்து கூக்குரல் நீயிட்டால் கேட்க திராணியற்ற முதுகெலும்பு வாயில்லா சுயநல மாந்தர் பலர் சூழ் உலகிது செய்தியின் தலைப்பாய் நீயானால் சமூக வலைதளங்களில் பதியப்படுவாய் கிடைக்கும் லைக்கும் ஷேரும்! ஆகையால், விழித்தேயிரு கையிலோர் கட்டையோடு.. தொட்டவுடன் எரித்து சாம்பலாக்கும் கவசம் ஒன்றைப் படைக்கும் வரை !!!"

கடவுளின் கல்லறை

கார்மேகங்களிடம் கடன் வாங்கியக் கருப்பை உடுத்திப் பறவைகளின் எச்ச அணிகலன்கள் அணிந்து தன் தோல் உரித்துக் குருதியும் சதையும் கலந்தொழுகக் கூடவே மிச்ச எலும்புகளும் விழுந்துடைய உடைந்த எலும்புத் துகள்களைத் தாங்கும் கை கால் விரலோடு நரம்பும் பின்னிப் பிணைந்து அழும் அழுகும் நிலையில் யாரும் கேட்பாரற்று மண்ணுக்குள் புதைத்தச் சடலமாய் சிதிலமடைந்த அந்தத் தேவாலயம்... அதிலே மிச்ச உயிரைக் குடித்துக் கும்மாளமிடும் கூகைகளும் சிலந்திகளும்.. அங்கே மெழுகுவர்த்திகள் எரிக்கப்படவில்லை.. பாவம் இருட்டறையில் இயேசுக் கண்கட்டி! அங்கே மணியோசை கேட்பதில்லை.. தனிமை கீதமொன்றை இசையின்றி திரும்ப திரும்ப முனுமுனுத்துக் கொண்டே இயேசு! அவரின் உடைந்த சிலுவையை ஒட்டவைக்க ஆள்யாருமில்லாமல்..! அங்கே திருமணங்கள் நடத்தப்படவில்லை.. புன்னகைகளும் பூக்களும் புளித்துக் காய்ந்துவிட்ட இடமது! பாடல்களும் பஜனைகளும் பாவ மன்னிப்புகளும் ஜெபங்களும் ஜனித்து மரிந்த இடமது.. பிராத்தனைகளும் புலம்பல்களும் கூக்கரலிட்டு கூவி ஓய்ந்த இடமது.. பாலும் அப்பமும் தின்றுக் கொழுத்து செரித்த இடமது.. இன்றும் நினைவுகளை அசைபோ...

தீராக் காதல்

நிலா வானம் காற்று காவியக் காதல் வேண்டா.. மழையாய்‌ எனையணைத்து மடியிலே துயில‌ ஏங்கும் முகிலாய்.. அதிகம் ஆர்ப்பரிக்காத ஆச்சரியங்கள் நிறைந்த ஆழ்கடலாய்.. மகிகையாய் மனதை மயக்கி கவிழ்க்கும் மலை முகடாய்.. அன்பினருவியில் மூழ்கி ஆனந்தப் புதையல் எடுக்கும் அடர் வனமாய்... கோபம் உருக்கி நகையாக்கும் கர்வம் சமைத்து பணிவாக்கும் தணலாய்... காதல் வேண்டுமெனக்கு! தேனே கரும்பே கனியே எனப் பொய்யாய் இனிக்கும் காதல் வேண்டா... மனதின் பிணி தீர்க்கும் மருந்தின் கசப்பாய்.. வெற்று நாட்களையும் சுவையேற்றும் பொய்கோபக் காரமாய்.. மென்மை திரிந்து இதழைக் கடைந்து வெண்ணையெடுக்கும் நொதித்தலின் புளிப்பாய்.. நிலைகொள்ளா எனை கட்டுக்குள் வைக்கும் அலைகடல் உப்பாய்.... காதல் வேண்டுமெனக்கு! மலரே மணமே உயிரே உலகமே என வேண்டா.. விருட்சமாகும் விதையாய் நம்பிக்கை உரமாய் கைக்கொடுக்கும் விழுதாய்.. தட்டும் தென்றலாய் வருடும் வாடையாய் வியர்வை வாசமாய்.. திசுக்களின் இசையாய் ஹார்மோனின் தாளமாய் இதயங்களின் பாடலாய்.. உனக்கும் எனக்குமாய் தினமோர் உலகம் படைக்கும் தீராக்காதல் வேண்டுமெனக்கு! ...

வாயை மூடிப் பேசவும்

மிகைப்படக்கூறு.. கவனிக்கப்படுவாய்! குறைத்துக்கூறு.. பரிகசிக்கப்படுவாய்! உள்ளப்படிகூறு.. உண்மையில்லை யெனப்படுவாய்! பேசாதே.. கோழை என்பார்! அதிகம் பேசு.. பேதை என்பார்! சிரித்து பேசினால் பித்தன் சிரிக்கவில்லை என்றால் சிடு மூஞ்சி.. ஆமாம் என்றால் புத்தியற்றவன் இல்லை என்றால் விதண்டாவாதி! போற்றினால் பொய்மை தூற்றினால் கயமை மாற்றினால் தந்திரம் மாற்றவில்லை எனில் பிடிவாதம்! அறிவுரை தந்தால் அதிகப்பிரசங்கி இல்லையேல் அறிவிலி ஆறுதல் கூறினால் போலியானவன் இல்லையேல் அக்கறையற்றவன் இன் சொல் வஞ்சகன் வன் சொல் நஞ்சகன் சலனமற்றவன் ஜடம் சாந்தமானவன் சாமியார் ஆர்ப்பரித்தால் ஆவேசம் பொறுமையென்றால் வேசம் இவற்றுக்கெல்லாம் நடுநிலையறிந்து நடந்தால் கிடைக்கும் நடிகன் எனும் பட்டம்!!