Posts

சட்டை - குட்டி ஸ்டோரி 3

வாரநாட்களிலே போர்வையை பிரிய மறுக்கும் அவள் இன்று அலாரம் அடிக்காமல் எழுந்து இருந்தாள். மணி 7. துலக்காத பல் வகுடு எடுத்து முந்தைய நாள் வாரின தலை  முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வாசல் ஓடினாள் மதி... எதிர்வீட்டு கம்பிக் கொடியில் வரிசையாய் சட்டைகள்‌. உதட்டின் நீளம் விரிந்து அவளின் தெற்று பற்கள் எட்டி பார்த்தன. கொடியில் காயும் சட்டைகள்,வேலை பார்க்கும் ஊரிலிருந்து அவன் வார விடுமுறைக்காக வீடு திரும்பியதற்கான அறிகுறி.  "இந்த முறையாச்சும் எப்படியாது சொல்லிடனும்.ஆனா எப்படி சொல்றது?" அவளின் மூளையையும் மனதையையும் ஏற்றப் பலகையாக்கி விளையாடிக் கொண்டிருந்த கேள்வி இது. பல முறை முயன்றாயிற்று. புரை மோர் வாங்க,தீபாவளி பலகாரம் கொடுக்க, பூக்கள் பறிக்க,வடாம் வற்றல் காய வைக்க என காரணங்களை தேடி பிடித்து அவன் வீடு ஏறி இறங்கியாயிற்று. அவனை கண்டால் ஏனோ மதிக்கு வார்த்தைகள் மீன் முள்ளாய் தொண்டையில் சிக்கிக்கொள்ளும். பாவம்.  அவனிடம் படித்துவிட்டு தருவதாய் கடன் வாங்கின புத்தகம், அத்துமீறி சன்னல் ஏறி வீடு நுழைந்த அவனின் மட்டைப்பந்து, ஒட்டு கேட்ட அவனின் ஓரிறு வார்த்தைகள், இடைவேளையின்றி இரண்டுநிமிடம் அவன் ...

இசை - குட்டி ஸ்டோரி 2

வெறுப்பு,அருவருப்பு,பரிதாபம் - என்னை கடந்து செல்லும் அத்துனை கண்களிலும் இவைதான் அப்பி இருக்கிறது. எனக்கு தான் ஏனோ உணர்ச்சிகள் ஏதுமில்லை. துளியும் அவமானமில்லை. இருந்திருந்தால் இந்த இரயில் நிலைய வாசலில் இப்படி நான் அமர்ந்திருக்க மாட்டேனே. ஒரே ஆறுதல் நான் தனியாக இல்லை. என்னுடன் என் சைலோஃபோன் இருக்கிறது. அது வெறும் இசைக்கருவி மட்டுமல்ல‌, நான் தினம் தொலைந்து போகும் பெருவனம். தினமும் அதன் இசை தான் என் உயிருக்கு பிச்சை போடுகிறது. ஒரே ஒரு ஆசை தான். என்றாவது ஒருநாள் என் இசையை யாராவது நின்று இரசித்திட வேண்டும். ஒரு ஒரே நிமிடம் போதுமானது. ஆனால் இன்றளவும் அது நிராசையாகவே இருக்கிறது. விடாது அடிக்கிறது குளிர்காற்றும் பனியும். நடுங்கும் விரல்களை கொண்டு இசை மீட்ட இயலவில்லை. இரயில் நிலைய‌ மின்தூக்கி அருகே இருக்கும் நடைமேடை மேலே படுத்துகிடக்கிறேன். அங்கு முன்னால் அமர்ந்திருந்தவன் விட்டு சென்ற அட்டை ஒன்றிருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தது,"வீடு வாசல் உறவுகள் வேலை அற்றவன். உயிர் வாழக் காரணம் ஏதுமில்லை.உயிரை மாய்க்கும் உரிமையும் இல்லாததால் அவமானத்திற்கு பழகிக்கொண்டிருக்கிறேன். உயிருக்கும் விலையுண்ட...

பட்டம் - ஒரு குட்டி ஸ்டோரி

Image
"ஐஐஐ என்ன அண்ணா இது, இவ்வளவு மேல போகுது".  "இது பட்டம், பாப்பா".  "எப்படி இவ்வளவு உயரமா போகுது. பறவை மாதிரி றெக்க இல்லாம?" "அதுவா அது லேசா இருக்கு இல்ல அதான் காத்தோட வேகத்துலயே அது பறக்குது.எந்த பக்கம் காத்து வீசுதோ அந்த பக்கம் பட்டத்தை விடணும். இல்லேனா வை கிழிஞ்சு போயிடும். அப்புறம் இந்த கயிரா கெட்டிமா பிடிச்சுக்கணும் விட்டா அது கீழ பறந்து போய் எங்காச்சும் விழுந்துடும்‌. முக்கியமா அடுத்தவங்க கயித்துல சிக்காமா பார்த்துக்கணும் பாப்பா. அப்புறம் அறுந்துடும்" "சரிண்ணா,நானும் விடறேனே. அப்புறம் இந்த கயிர கெட்டிமா பிடிச்சுக்கறேன்". இது நானும் அண்ணாவும் செங்கல்பட்டு மலை மேல் நின்று பேசியது. அன்று தான் பட்டம் விட கற்றுக்கொண்டேன். இன்று வரை எல்லாமே எனக்கு பட்டம் விடுவது போல் தான்.  எப்பவும் நம்ம மனச லேசா வச்சிக்கணும். எல்லா குப்பையும் போட்டு அதை அழுத்தாம. அப்பதான் இலகுவா பறக்க முடியும். பட்டத்தோட கயிறு மாதிரி ஏதோ ஒன்றை விடாம பற்றிக்கணும். கொள்கையோ இலக்கோ கனவோ  அந்த ஏதோ ஒன்னு தான் நாம் வாழ்க்கை வெளியில் தொலைந்து போகாம வச்சிக்கும். நம்ம...

வலியதிகாரம்

கட்டிய கனவொன்றை கலைத்து கல்கல்லாய் உடைத்து உடைத்தக் கையின் உதிரத்தை வறண்ட உதட்டிலே நிரப்பி உன் எச்சில் படிந்த கன்னங்களைக் கண்ணீரால் அழுத்தி துடைத்துத் தோர்த்து இமையிரண்டின் நடுவில் நிற்குமுன் பிம்பத்தை மறைக்க என்னுலகை இருளாக்கி அகராதியெல்லாம் உன் மொழியானதால் ஊமையாகி வாயடைத்து விரல் கோதிய கேசத்தில் வாசம் பூட்டி.. முடியாமல் முத்தப் பதியமிட்ட தேகத்தில் பட்ட முளைகளை களையாமல் உன் நெற்றி வேர்வை சேர்த்த வெற்றுக் கோப்பையை நுகர்ந்தே தாகம் தீர்த்து நெஞ்சக்குழியில் நீ வைத்த பூந்தோட்டத்தில் மிச்சமிருக்கும் சருகை மெல்ல தின்று இறுக அணைத்திருக்கையில் என் மேல் தைத்த உன் தேகம் பிய்த்து எடுத்ததால் வழிந்த குருதியோடும்.. ஆறுபோகம் அறுவடை செய்து நித்தமும் தின்று செரித்த நினைவுகளின்  வாடையோடும்.. இறந்தே கிடக்கின்றேன் நான்!

கைரேகை ஓவியம்

வெள்ளைக்காகிதம் எனை கைரேகை ஓவியங்களால் நீ நித்தமும் நிரப்புகிறாய் விரல் தூரிகையால் உணர்வுகள் குழைத்து மோகப்படங்கள் வரைகிறாய் மென்தேகம் கடந்து திசுக்களிலும் அணுக்களிலும் ஒரே ஓவியங்கள் வரைபவனில்லை நீ ஒவ்வொன்றும் புதுநிறம் இரவின் கருப்பு, நிறங்களை விழுங்க முயன்று தினமும் தோற்றே நிற்கும்! ஓவியங்களில் லயித்து உணர்ச்சிகளால் உணர்வற்று இருக்கும் என்மேல் ஓடும் உவர் ஜீவநதியால் ஓவியங்கள் அழிவதில்லை அவைகளின் ஈரம் காய்வதுமில்லை..

நானெனும் நீ

நடுங்கும் ஓர் குளிரிரவில் நரம்புகள் கிழிக்கும் ஞாபக ஈட்டியால் நினைவு மெத்தைக்குள் பொதிந்தே நீர் கோலமிடுகிறேன் போர்வையில்.. சிந்தும் துளியெல்லாமுன் பிம்பம் சித்தன்னவாசல் ஓவியமாய் அது மாயை ஆனால் மறுக்கும் அறிவியல் மறந்த மனம் சுயமே மறந்த மனமாதலால் திரட்டியத் துளிகள் சேர்த்து ஞாபக மூட்டையை பிரித்து ஒவ்வொன்றாய்த் துவைத்து அலசி அடித்துக் கசக்கிப் பிழிந்த பின்னும் அதில் இன்னும் ஒரு சொட்டு ஞாபகம் ஒரு சொட்டின் தொடர் வினையால் மறு கணமே மூட்டை நிறையும் வினைப்பயனால் கூடும் கனம் மூட்டை சுமந்தே தேய்ந்த முதுகெலும்பை முட்டியே உள்நுழையும் ஞாபகக்கூறுகள் மச்சில் கலந்து பின்னதைக் குடைந்து நெஞ்சின் உள்ளே நுழைந்து வெடிக்கும் வெடித்தத் துகள்கள் உதிரத்தில் குழைந்த அடுத்த நொடி நானெல்லாம் நீயாகிப் போகும்!!!

மனப் பட்டாம்பூச்சிகள்

உன் கண்சிமிட்டலைக் கண்டுதான் என் மனப் பட்டாம்பூச்சிகள் பறக்கப் பழகுகின்றன தொண்டைக்குழியில் ஓராயிரம் வார்த்தைக் கருக்கள் உன் ஒலி குடித்தே நித்தமும் வளர்கின்றன விடாமல் பற்றி எரியுமென் மனதில் உன் புன்முறுவல்கள் எண்ணெய் ஊற்றுகின்றன வியர்வைத் துளியில் தலைத் துவட்டி மலர விரல் மொட்டுகள் காத்துகிடக்கின்றன உனக்கும் எனக்குமான இடைவெளியில் விடையற்ற வினாக்கள் ஜனித்து மரிகின்றன உயிரில் பாதியை காற்றில் கரைத்து உன்னுள் அனுப்புகிறேன் இணையாத நம் துருவங்களை இணைக்கும் முயற்சியில்... கரையணைக்கக் கடல் தூதுவிடும் அலையாய் நினைவலைகள் தூதுவிட்டே நித்தமும் வாழ்கிறேன் தனித்தீவாய்!