சட்டை - குட்டி ஸ்டோரி 3

வாரநாட்களிலே போர்வையை பிரிய மறுக்கும் அவள் இன்று அலாரம் அடிக்காமல் எழுந்து இருந்தாள். மணி 7. துலக்காத பல் வகுடு எடுத்து முந்தைய நாள் வாரின தலை 
முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வாசல் ஓடினாள் மதி...

எதிர்வீட்டு கம்பிக் கொடியில் வரிசையாய் சட்டைகள்‌. உதட்டின் நீளம் விரிந்து அவளின் தெற்று பற்கள் எட்டி பார்த்தன. கொடியில் காயும் சட்டைகள்,வேலை பார்க்கும் ஊரிலிருந்து அவன் வார விடுமுறைக்காக வீடு திரும்பியதற்கான அறிகுறி. 

"இந்த முறையாச்சும் எப்படியாது சொல்லிடனும்.ஆனா எப்படி சொல்றது?" அவளின் மூளையையும் மனதையையும் ஏற்றப் பலகையாக்கி விளையாடிக் கொண்டிருந்த கேள்வி இது. பல முறை முயன்றாயிற்று. புரை மோர் வாங்க,தீபாவளி பலகாரம் கொடுக்க, பூக்கள் பறிக்க,வடாம் வற்றல் காய வைக்க என காரணங்களை தேடி பிடித்து அவன் வீடு ஏறி இறங்கியாயிற்று. அவனை கண்டால் ஏனோ மதிக்கு வார்த்தைகள் மீன் முள்ளாய் தொண்டையில் சிக்கிக்கொள்ளும். பாவம். 

அவனிடம் படித்துவிட்டு தருவதாய் கடன் வாங்கின புத்தகம், அத்துமீறி சன்னல் ஏறி வீடு நுழைந்த அவனின் மட்டைப்பந்து, ஒட்டு கேட்ட அவனின் ஓரிறு வார்த்தைகள், இடைவேளையின்றி இரண்டுநிமிடம் அவன் சிரிக்கும் சத்தம், அவன் அழகாய் இருக்கிறது மதி என பாராட்டிய கலர் கோலம், அவனின் ஈரம் காயா சட்டை, கசக்கிப் பிழிந்தும் அதில்  ஒட்டிக் கொண்டிருக்கும் அவன் ஒருத்துளி வாசம் இவை அனைத்தையும் தூது சொல்ல அனுப்பியும் பதில் ஏதுமில்லை. அவனை சென்றடைந்ததா என அறிய வழியேதுமில்லை. ஆனால் வார இறுதியின் அவனின் ஒவ்வோர் அசைவையும் அவள் கவனிக்க மட்டும் தவறவில்லை. அவன் பேசா வார்த்தைகளை வினாவாக்கி இவள் பேச விழையும் வார்த்தைகளை அதன் விடையாக்கி நாட்களை கடத்தி கொண்டு இருந்தாள்.

இதற்கிடையே, மேற்படிப்பிற்காக அவள் விண்ணப்பித்த பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து இருந்தது. கனவுக்காக கடல் கடக்க வேண்டிய கட்டாயம். ஆனால், சனிக்கிழமைகளில் அவள் அலாரம் எப்பொழுதும் அடித்ததில்லை. அவன் சட்டையின் ஈரம் சுமந்த காற்றுக்காக காத்துக்கிடந்தது அவளின் காதலும் சேமித்த வைத்த வார்த்தைகளும்.

இரண்டாண்டு படிப்பை முடித்து வீட்டுக்கு வந்திருந்தாள் மதி. இந்த முறை அவசியம் கூண்டில் அடைத்த வார்த்தைகளுக்கு விடுதலை தரும் முடிவுடன் சனிக்கிழமைக்காக  ஆவலுடன் காத்திருந்தாள் மதி. நான்கு நாட்கள் தவத்திற்கு வரமாய் வந்தது அந்த சனிக்கிழமை. அன்றும்,அலாரம் அடிக்காமல் எழுந்திருந்தாள். மணி 7.அவசரமாக கலைந்திருந்த கேசத்தை காது மடலில் செருகி,முகத்தை கழுவி வாசல் நோக்கி ஓடினாள். எதிர் வீட்டு கொடியில் வழக்கம் போல வரிசையாக அவன் சட்டை..அவள் உதட்டின் நீளம் விரிந்து சட்டென குறைந்தது.. அவன் சட்டைக்களுக்கு நடுவே சேலைகளும் குட்டியாய் பல சட்டைகளும். சட்டையின் ஈரம் சுமந்த காற்று அவள் சேமித்த வார்த்தைகளை கரைக்க தொடங்கி இருந்தது...

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!