இசை - குட்டி ஸ்டோரி 2

வெறுப்பு,அருவருப்பு,பரிதாபம் - என்னை கடந்து செல்லும் அத்துனை கண்களிலும் இவைதான் அப்பி இருக்கிறது. எனக்கு தான் ஏனோ உணர்ச்சிகள் ஏதுமில்லை. துளியும் அவமானமில்லை. இருந்திருந்தால் இந்த இரயில் நிலைய வாசலில் இப்படி நான் அமர்ந்திருக்க மாட்டேனே. ஒரே ஆறுதல் நான் தனியாக இல்லை. என்னுடன் என் சைலோஃபோன் இருக்கிறது. அது வெறும் இசைக்கருவி மட்டுமல்ல‌, நான் தினம் தொலைந்து போகும் பெருவனம். தினமும் அதன் இசை தான் என் உயிருக்கு பிச்சை போடுகிறது. ஒரே ஒரு ஆசை தான். என்றாவது ஒருநாள் என் இசையை யாராவது நின்று இரசித்திட வேண்டும். ஒரு ஒரே நிமிடம் போதுமானது. ஆனால் இன்றளவும் அது நிராசையாகவே இருக்கிறது.

விடாது அடிக்கிறது குளிர்காற்றும் பனியும். நடுங்கும் விரல்களை கொண்டு இசை மீட்ட இயலவில்லை. இரயில் நிலைய‌ மின்தூக்கி அருகே இருக்கும் நடைமேடை மேலே படுத்துகிடக்கிறேன். அங்கு முன்னால் அமர்ந்திருந்தவன் விட்டு சென்ற அட்டை ஒன்றிருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தது,"வீடு வாசல் உறவுகள் வேலை அற்றவன். உயிர் வாழக் காரணம் ஏதுமில்லை.உயிரை மாய்க்கும் உரிமையும் இல்லாததால் அவமானத்திற்கு பழகிக்கொண்டிருக்கிறேன். உயிருக்கும் விலையுண்டு என்று நீங்கள் அறிவீர்தானே? ஆமாம், இந்த உயிருக்கு ஒரு ரொட்டி துண்டின் விலை. இயன்றவர்கள் உதவினால் உயிரோடிருப்பேன் இன்னுமோர் நாள்". இதைப் படித்தவுடன் எனக்கும் என்னுடைய சைலோஃபோனுக்கும் உறவாய் அடையாளங்கள் தெரியாத அந்த மனிதனும் இணைந்து கொண்டார். அந்த அட்டை இன்று என்னுடையதாகி விட்டது. நில்லாமல் கால்கள் என்னை கடந்து செல்கின்றன. எப்போதாவது கேட்கிறது நாணயம் தட்டில் விழும் அரவம். 

கடக்கும் கால்களில் ஒன்று மட்டும் நின்றுவிட்டது. அதை யாரோ இழுத்தும் அது நகரவில்லை. முதன் முறையாய் எனை நோக்கும் கண்களில் நிரம்பி வழிகிறது அன்பு,காதல், மகிழ்ச்சி. அந்த கண்கள் என்னையும் பின் என் சைலோஃபோனையும் மாறி மாறி பார்க்க எனக்கோ துள்ளல். விரல்களின் நடுக்கம் ஓடி போக நான் எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். முதன் முறையாக எனக்கே எனக்காக ஒரு ரசிகன்,கண் கொட்டாமல் எதையும் பொருட்படுத்தாமல், சிரிப்பும் உற்சாகமுமாய் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறான். இது போதும், நான் உயிர் வாழ. இதுவரை நான் அறிந்த இதுவரை அறியாத இசையெல்லாம் பெருக்கெடுத்து வர என்னை மறந்து வாசித்து முடித்த நேரம் எனை சுற்றி பெரும் கூட்டம்.‌ மரணத்தை விடவும் மகிழ்ச்சியாய் இருந்தது அந்த தருணம். பின் அவரவர் சில்லறையை வீசி விட்டு செல்ல,அவன் இன்னும் நகரவில்லை. நான் அவனிடம் ஏதேதோ கேள்விகள் கேட்க அவனிடம் புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது. " ஹி இஸ் டெஃப், சாரி ஃபார் ட்ரப்ளிங்க் யூ", என்று பதிலளித்து விட்டு அவன் உடன் வந்தவள் அவனை அழைத்து செல்ல, நான் அவனின் அடுத்த வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்,உயிர் வாழக் காரணம் கிடைத்தவனாய்.

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!