பட்டம் - ஒரு குட்டி ஸ்டோரி
"ஐஐஐ என்ன அண்ணா இது, இவ்வளவு மேல போகுது".
"இது பட்டம், பாப்பா".
"எப்படி இவ்வளவு உயரமா போகுது. பறவை மாதிரி றெக்க இல்லாம?"
"அதுவா அது லேசா இருக்கு இல்ல அதான் காத்தோட வேகத்துலயே அது பறக்குது.எந்த பக்கம் காத்து வீசுதோ அந்த பக்கம் பட்டத்தை விடணும். இல்லேனா வை கிழிஞ்சு போயிடும். அப்புறம் இந்த கயிரா கெட்டிமா பிடிச்சுக்கணும் விட்டா அது கீழ பறந்து போய் எங்காச்சும் விழுந்துடும். முக்கியமா அடுத்தவங்க கயித்துல சிக்காமா பார்த்துக்கணும் பாப்பா. அப்புறம் அறுந்துடும்"
"சரிண்ணா,நானும் விடறேனே. அப்புறம் இந்த கயிர கெட்டிமா பிடிச்சுக்கறேன்".
இது நானும் அண்ணாவும் செங்கல்பட்டு மலை மேல் நின்று பேசியது. அன்று தான் பட்டம் விட கற்றுக்கொண்டேன். இன்று வரை எல்லாமே எனக்கு பட்டம் விடுவது போல் தான்.
எப்பவும் நம்ம மனச லேசா வச்சிக்கணும். எல்லா குப்பையும் போட்டு அதை அழுத்தாம. அப்பதான் இலகுவா பறக்க முடியும். பட்டத்தோட கயிறு மாதிரி ஏதோ ஒன்றை விடாம பற்றிக்கணும். கொள்கையோ இலக்கோ கனவோ அந்த ஏதோ ஒன்னு தான் நாம் வாழ்க்கை வெளியில் தொலைந்து போகாம வச்சிக்கும். நம்ம கூடவே பறந்தாலும் அடுத்தவங்க கயிறை நம்ம கட்டுக்குள்ள வச்சிக்கணும்னு நினைக்க கூடாது. அப்புறம் உறவு அறுந்து தான் போகும். நான் எதுக்கு காற்றோட திசைல போகணும் நான் எதிர்திசைல தான் போவேன். ஐ டோண்ட் கோ வித் தி ஃபோலோ ஆஃப் லைஃப். அப்படின்னு வாழ்க்கைல நடக்கற எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுட்டு எதிர் பதமா சிந்திச்சுட்டு இருந்தா நம்ம ஆற்றல் தான் வீணா போகும். அது நம் மன ஆரோக்கியத்துக்கே பாதகமா அமைந்துடும்.
இப்படி தான் அண்ணா அன்று சொல்லி கொடுத்தது இன்றைக்கு என் வாழ்வை நான் மன நிம்மதியா வாழ உதவிக்கொண்டிருக்கிறது.
"அம்மா எவ்வளவு நேரம் கேட்கறேன் இது என்ன?" ,
என் மகன் எனை உலுக்க பழைய நினைவுகளில் இருந்து மீண்டு," பட்டம் டா" , என்று பதில் கூறினேன். அவன் அடுத்த கேள்விக்கு தயாராகினான்.
பறப்பதற்கு இறக்கைகள் அவசியமல்ல. உறுதியான கயிறுகள்(கனவுகள்) போதும்
Comments
Post a Comment