சட்டை - குட்டி ஸ்டோரி 3
வாரநாட்களிலே போர்வையை பிரிய மறுக்கும் அவள் இன்று அலாரம் அடிக்காமல் எழுந்து இருந்தாள். மணி 7. துலக்காத பல் வகுடு எடுத்து முந்தைய நாள் வாரின தலை முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வாசல் ஓடினாள் மதி... எதிர்வீட்டு கம்பிக் கொடியில் வரிசையாய் சட்டைகள். உதட்டின் நீளம் விரிந்து அவளின் தெற்று பற்கள் எட்டி பார்த்தன. கொடியில் காயும் சட்டைகள்,வேலை பார்க்கும் ஊரிலிருந்து அவன் வார விடுமுறைக்காக வீடு திரும்பியதற்கான அறிகுறி. "இந்த முறையாச்சும் எப்படியாது சொல்லிடனும்.ஆனா எப்படி சொல்றது?" அவளின் மூளையையும் மனதையையும் ஏற்றப் பலகையாக்கி விளையாடிக் கொண்டிருந்த கேள்வி இது. பல முறை முயன்றாயிற்று. புரை மோர் வாங்க,தீபாவளி பலகாரம் கொடுக்க, பூக்கள் பறிக்க,வடாம் வற்றல் காய வைக்க என காரணங்களை தேடி பிடித்து அவன் வீடு ஏறி இறங்கியாயிற்று. அவனை கண்டால் ஏனோ மதிக்கு வார்த்தைகள் மீன் முள்ளாய் தொண்டையில் சிக்கிக்கொள்ளும். பாவம். அவனிடம் படித்துவிட்டு தருவதாய் கடன் வாங்கின புத்தகம், அத்துமீறி சன்னல் ஏறி வீடு நுழைந்த அவனின் மட்டைப்பந்து, ஒட்டு கேட்ட அவனின் ஓரிறு வார்த்தைகள், இடைவேளையின்றி இரண்டுநிமிடம் அவன் ...