காத்திருக்கிறாள் அவள்

காத்திருக்கிறாள் அவள்
காலை கதிரவன்
திரைச்சீலை கிழித்து
பாயும் ஒலி பட்டதும்
வாசல் வரை ஓடி
அவனை காணாது
சன்னல் கம்பியிடையே
சலனமற்று
காத்திருக்கிறாள் அவள்

சில கசங்கிய கடிதங்கள்
பல உடைந்த பொம்மைகள்
எங்கோ எப்பொழுதோ எடுத்த
ஓர் புகைப்படம்
இவைகள் தரும்
ஞாபக மருந்தோடு
காத்திருக்கிறாள் அவள்

தொலைபேசி அடிக்கும் ஒலிக் கேட்டு
சட்டென ஓடி பட்டென எடுத்து
அதில் அவன் குரல் கேளாது
அணைத்து பின் துடித்து
காத்திருக்கிறாள் அவள்
என்றுமே வராத
அவன் அழைப்பிற்காக

நான்கு சுவர் சேர்த்து
ஓர் உலகம் செய்து
அதில் எங்கும்
அன்பை நிரப்பி
நினைவுகளை சுவாசித்து
எண்ணங்களை புசித்து
தனிமை உலகம் அதனை
அழகாக்கி காத்திருக்கிறாள் அவள்

அவள்
கேள்வியாய் வளைந்த தேவதை
முக்கால் நூற்றாண்டை கடந்த கவிதை
கன்னக்குழியும் நெற்றி சுருக்கமும்
கால வெள்ளத்தின் சுவடு
நரை - மிதந்து போகும் வெண்முகில்
தளர்ந்த நடை - மீதி இருக்கும் ஆற்றலின் சான்று

கண்களிள் எங்கோ வெறித்தப் பார்வை ஏற்றி
தொலைந்து போன நேசத்தை யாசித்து
காத்திருக்கிறாள் அவள்
அவளின் மகனின் வருகைக்காக
முதியோர் இல்லத்தில்
ஓர் ஈரப் புன்னகையோடு..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!