இப்படிக்கு கோடைக்காரி
எனக்கு வெயில் பிடிக்கும் கத்திரியில் குடை பிடிக்கா கோடை காதலி நான் உச்சி வெயிலில் ஊர்சுற்றி வெயிலின் வெம்மை பூசிக் கொள்ளும் விளையாட்டுகாரி நான்.. எனக்கு வெயில் பிடிக்கும் பள்ளிக்குப் பூட்டுப் போட்டு பாட்டி வீட்டு சாவிக்கொடுக்கும் வெயில் பிடிக்கும்.. எட்டுப் பெட்டியில் தொலைந்து பம்பரமாய் சுழன்று பரணில் ஒளிந்து கண்கட்டி ஓட முடியுமே அதனால், எனக்கு வெயில் பிடிக்கும்.. வேப்ப மர ஊஞ்சல் உலுக்கி புளியம்பூ,காய்,பழம் மென்று வெள்ளத்தில் கரைந்த வெள்ளரி, தொண்டைக் குழியில் வழுக்கும் பனங்காயுடன், மாங்காயின் புளிப்பை இனிப்பாய் சுவைக்க முடியுமே அதனால் எனக்கு வெயில் பிடிக்கும்.. உங்களுக்கும் வெயில் பிடிக்குமா? வரிசையில் நில்லுங்கள் வாழையிலை மடித்து சோளம் சேர்த்து வறுத்த அரிசி தருகிறேன் கொறித்துக்கொள்ள மல்லாட்டை கொல்லை போய் செடி பறிக்கலாம்.. கொடைக் கூலியாய் வெயிலில் காய்ந்து கருமை வாங்கி வரலாம்..